- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போ நயன்தாரா... இப்போ கீர்த்தி சுரேஷ்... முன்னணி நடிகைகளை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் அட்லி...

அப்போ நயன்தாரா… இப்போ கீர்த்தி சுரேஷ்… முன்னணி நடிகைகளை பாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் அட்லி…

- Advertisement -

இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக திரைப்பட உலகிற்குள் நுழைந்தவர் இயக்குனர் அட்லி. ஆரம்பத்தில் குறும்படங்களை எடுத்து சினிமா கற்றுக்கொண்ட அவர், ராஜா ராணி திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம், ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவுக்கு ராஜா ராணி பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும், சலிப்புத் தட்டாத திரைக்கதை, ஜிவி பிரகாஷின் அசத்தலான பின்னணி இசையால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அது மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே குடும்பப் படங்களின் இயக்குனராக புகழின் உச்சிக்கு சென்றார் அட்லி.

ராஜா ராணியில் கிடைத்த வெற்றி அவருக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. இதனால் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள், அட்லி எப்படியும் பின்னி பெடலெடுத்து விடுவார் என நம்பிக்கையோடு காத்திருந்தனர். அதற்கு சற்றும் குறைவில்லாமல் தெறி படத்தை எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் அட்லி. இதுவும் விஜயகாந்தின் சத்ரியன் படத்தை போலவே இருந்தாலும்,திரைக்கதை விறுவிறுப்பாக அமைந்ததால் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர்.

- Advertisement -

தெறி பட வெற்றிக்குப் பிறகு, அட்லி யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த படமும் விஜய்யோடுதான் என்று அறிவிப்பு வெளியானது. இந்த முறை ஒன்றுக்கு மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடிக்க, அபூர்வ சகோதரர்கள் கதையை அப்படியே எடுத்து வந்து மெர்சல் என பெயரை மட்டும் மாற்றி, அதையும் வெற்றி படமாக கொடுத்தார் அட்லி. அதர பழசான கதையால் சமூக வலைதளங்களில் அட்லி கேலி கிண்டலுக்கு ஆளானாலும், அவரை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் கோடி கோடியாக அள்ளியதால் அடுத்தடுத்த உயரங்களுக்கு பறந்தார் அட்லி.

தொடர்ந்து விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்த அவர், பிகில் படத்தைக் கொடுத்தார். இந்தப் படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் எந்த குறையும் காட்டாமல் பணத்தை அள்ளி குவித்தது. இதனால் விஜய் வைத்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் எனப் பாராட்டப்பட்டார் அட்லி.

- Advertisement -

இதையடுத்து அட்லி யாரை வைத்து இயக்குவார் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்தார் இயக்குனர். ஜவான் எனும் தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். அதுபோக சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார் அட்லி. அங்குள்ள நடிகர் வருண் தவானை வைத்து அவர் தெறி படத்தை ரீமேக் செய்கிறார். தமிழில் ஜீவாவை வைத்து கீ என்னும் படத்தை எடுத்த காலிஸ், தெறி ரீமேக்கை இயக்குகிறார். இதில் கதாநாயகி யாராக இருப்பார் என பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. தமிழில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்தான், தெறி ரீமேக்கில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள அவரது ரசிகர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்