தமிழ் சினிமாவை நன்கு கவனித்து பார்த்தால், யதார்த்தங்களை மீறிய நிறைய அபத்தங்கள் இருப்பதை உணர முடியும். 1980களில், பெற்றோரை கொன்ற வில்லனை பழிவாங்குவதே ஹீரோவின் கடமையாக இருக்கும். 1990களில் வெளியான படங்களில் திமிர் பிடித்த நாயகியை திருத்துவதற்காக ஹீரோ திருமணம் செய்துக்கொள்வார்.
2000, 2010ம் ஆண்டுகளில் காதலையும், பேயையும் மையப்படுத்தி திகில் படங்கள் வந்தன. இப்போது தமிழ் சினிமாவில் வில்லன்களை பழிவாங்குவதே ஹீரோக்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் ஹீரோக்கள் வில்லனாக நடிப்பது இப்போது டிரண்டிங் ஆக மாறியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் காட்சிகளில், காதல், ஆக்சன் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அபத்தங்களை சொன்ன படம்தான் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம். சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, சதீஷ் நடிப்பில் 2010ம் ஆண்டில் வெளியான படம் தமிழ் படம். தமிழ் சினிமாவில் வந்த படங்களில் வந்த அபத்தமான காட்சிகளை காமெடியாக கிண்டலடித்து இந்த படத்தை கதையாக உருவாக்கியிருந்தனர்.
இந்த படம் ரசிகர்களின் பலத்த ஆதரவால் அமோக வெற்றி பெற்றது. அடுத்து அதே பாணியில் 2018ம் ஆண்டில் தமிழ் படம் 2ம் பாகம் வெளியானது. இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனாலும் மற்ற தமிழ் படங்களை கிண்டல் அடிக்கும் வகையிலான காட்சிகளை இந்த படங்களை புகுத்தியிருப்பது ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது.
தமிழ் படத்தின் 3வது பாகம் எப்போது வெளிவரும் என்று இயக்குனர் சிஎஸ் அமுதனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இவர் கடந்த 2023ம் ஆண்டில் விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் தமிழ் படம் 3வது பாகம் உருவாக இருப்பதை நடிகர் மிர்ச்சி சிவா உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் மிர்ச்சி சிவா கூறுகையில், தமிழ் படம் 3வது பாகம் குறித்து ஒய் நாட் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்தை சந்தித்து பேசியுள்ளோம். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கு மேலாக பேசி 2025ம் ஆண்டில் தமிழ் படம் 3ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது சாதாரணமாக நடக்கும். ஆனால் 100 படங்களை பார்த்து கதை எழுதுவது என்பது சவாலான விஷயம் என்று நடிகர் மிர்ச்சி சிவா கூறியிருக்கிறார்.





