உறவுகளின் உன்னதத்தை தனது திரைப்படத்தின் மூலம் தத்துரூபமாக காட்டும் திறமை மிக்கவர் இயக்குனர் பிரேம்குமார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் இந்த பிரேம்குமார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில், உண்மையான கதை பிரேம்குமாரின் வாழ்க்கையில் தான் நிகழ்ந்தது. பாலாஜி இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்தது மூலம் விஜய் சேதுபதியுடன் நட்பான பிரேம்குமார் 96 திரைப்படத்தை அவருக்காக எடுத்தார்.
முறிந்து போன பள்ளிக்கூட காதலர்கள் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் அந்த ஒரு நாள் இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை உணர்வுபூர்வமாகவும் எதார்த்தமாகவும் மிக அழகாகவும் பிரேம்குமார் கூறியிருந்தார். இயக்குனரின் கதைக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருந்தனர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா.
இப்போது வரை பலராலும் 96 திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் மீண்டும் ஒரு உறவுகளை மையப்படுத்தி பிரேம்குமார் மெய்யழகன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் இந்த திரைப்படத்தை அவர் இயக்கும் ஐடியாவிலேயே இல்லையாம். புத்தகத்திற்கான கதையைத்தான் அவர் எழுதியிருந்தாராம்.
பிறகு அதையே திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட, கார்த்தி கதாநாயகனாக உள்ளே இருந்தார். 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த திரைப்படத்தை தயாரித்தனர். அரவிந்த்சாமி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தனர்.
தற்போது இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் ஒரு இழுவை இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். மொத்தம் மூன்று மணி நேரம் இந்த திரைப்படம் ஓடுவதை இதற்கு காரணம். இதே மெய்யழகன் திரைப்படம் தெலுங்கில் சத்தியம் சுந்தரம் என்னும் பெயரில் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால் அங்கு படத்தில் இருந்து 23 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதையே தமிழிலும் செய்திருக்கலாமே என்று ரசிகர்கள் சிலர் இணையத்தில் கூறி வருகின்றனர்.





