நடிகை குஷ்பு இப்போது பாரதிய ஜனதா கட்சியில், முக்கிய பிரபலங்களில் ஒருவராக இருக்கிறார். தேசிய மகளிர் ஆணைய குழுவில் உறுப்பினராகவும் இருக்கிறார். முதலில் திமுக, அடுத்து காங்கிரஸ் என 2 கட்சிகளுக்கு சென்று குஷ்பு, அங்கு தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்காத நிலையில், பாஜக பக்கம் ஒதுங்கினார். அங்கு அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மீண்டும் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஊர் ஊராக நடைபயணம் சென்று கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.
இதுகுறித்து நடிகை குஷ்பு, பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், சில நேரங்களில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், என்னால் பிரசாரத்தில் ஈடுபட முடியாது.
பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையை பின்பற்றி வரும் நான் கனத்த இதயத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள முதுகு தண்டுவட பிரச்னை காரணமாக, நேரடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிரசாரம் செய்வேன், என்று குஷ்பு அதில் கூறியிருக்கிறார்.
நடிகை குஷ்பு, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல பரிச்சயம் கொண்டவர். அப்படி இருக்கையில், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு இனி வரமாட்டேன் என 10 நாட்கள் உள்ள நிலையில், அவர் மறுத்திருப்பது பாஜக வினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
சினிமாவில் சீனியரான ராதிகா சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இப்போது பாஜக கூட்டணி வேட்பாளராக விருதுநகரில் போட்டியிடுகிறார். அவரது வருகையை விரும்பாத குஷ்பு, ராதிகாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யக் கூடாது என்பதற்காகவே உடல் நலத்தை காரணமாக காட்டி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மறுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.





