நகைச்சுவை நடிகராக இருந்த சூரிக்கு, அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு முன்பு, சமூக வலைதளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளான நடிகராக இணையதள வாசிகளால் சித்தரிக்கப்பட்டார் சூரி.
இதற்கு முக்கிய காரணம், சூரியின் ஒரே விதமான டயலாக் டெலிவரி தான். ஆங்கிலம் பேசுவது போல் அவர் தொடர்ந்து செய்து வந்த நகைச்சுவை, ரசிகர்களை எரிச்சல் ஊட்டியது. போதாக்குறைக்கு அவரது காமெடியும் எடுபடாமல் போனதால், சூரியை ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது.
இப்படியான சூழலில் தான் தனது அடுத்த படத்திற்கான கதையில் சூரியை கதாநாயகனாக முடிவெடுத்தார் வெற்றிமாறன். இதற்காக விடுதலை திரைப்படத்தின் கதையை எழுதி வைத்து, குமரேசன் கதாபாத்திரத்தை சூரிக்கு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி, குமரேசன் ஆகவே வாழ, அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து போயினர்.
விடுதலை படத்தின் முதல் பாகம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆன நிலையில், அடுத்ததாக அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இதற்காக சிறுமலை பகுதியில் விறுவிறுப்பாக சூட்டிங்கை நடத்தினார் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டும் ரோட்டர்டாமில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவிற்கு தயாரானது.
அங்கு விடுதலை திரைப்படம் திரையிடப்பட, ரசிகர்கள் தொடர்ந்து ஐந்து நிமிடம் கைதட்டி அதனை கொண்டாடினர். இரண்டாம் பாகம் அற்புதமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் அந்த சர்வதேச திரைப்பட விழாவில், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஏழுமலை ஏழு கடல் திரைப்படம் திரையிடப்பட்டது. ராம் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் அங்கு சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் சூரி நடித்திருக்கும் கொட்டு காளி திரைப்படம், வரும் 16ஆம் தேதி பெர்லின் சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதனை வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார். இவரது முந்தைய திரைப்படம் ஆன கூழாங்கல்லும், சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற நிலையில், கொட்டுக்காளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.





