மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடுகளாக மாறியது. குடியிருப்புகளை சுற்றி மழைவெள்ளம் குளம்போல தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதனால் சென்னையில் பல பகுதிகளில், வெள்ளம் பாதித்த இடங்களில் உடனடியாக நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளம் அதிகமாக சூழ்ந்த பகுதிகளில் இருந்து, போட்களில் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவார முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது.
மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக களத்தில் சென்று உதவியது கேபிஒய் பாலாதான். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் இந்த பாலா. காமெடி செய்து ரசிகர்களை மகிழ்விப்பவர். அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். சில படங்களிலும் பாலா நடித்திருக்கிறார். இவர் 5 லட்சம் ரூபாய் சொந்த பணத்தை மக்களுக்காக வழங்கினார்.
வளர்ந்து வரும் நடிகராக உள்ள பாலா, மிக குறைந்த வயதிலேயே மற்றவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மலைவாழ் மக்கள், உதவி வேண்டுவோர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கு தானாக முன்வந்து உதவும் மனம் கொண்டவராக பாலா இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், அந்தியூர் வனப்பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கிக் கொடுத்தார். இதையறிந்த பலரும் அவரது தாராள குணத்தை பாராட்டினர். ஆனால் ஒரு சிலர், இப்படி சம்பாதித்த பணத்தை உதவி என வாரி இறைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கை விரல்களில் காயம் என்ற நிலையில் விரல்களுக்கு பாண்டேஜ் கட்டுப்போட்ட நிலையில் பாலா ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனம் திறந்தது, விரல் உடைந்தது நன்றி என அதில் பதிவிட்டுள்ளார். அதாவது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1000 என 340 குடும்பங்களுக்கு நிதி, நைட்டீஸ், லுங்கிகள், பெட்ஷீட் என பலருக்கும் வழங்கிய நிலையில், அதில் ஏதோ ஒரு நெரிசலில் சிக்கி கைவிரலில் அடிபட்டு பாலா கட்டு போட்டிருப்பது தெரியவந்துள்ளது.





