நடிகர் மனோபாலா நடிக்க வருவதற்கு முன்பு பல படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அவரை பலருக்கும் நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் அவர் கடந்த 1980 90களில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்த பல படங்களை இயக்கியவர் என்பது பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாது.
இயக்குனர் மனோபாலா இயக்கத்தில் 40 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் 16 டிவி சீரியல் மற்றும் 3 டிவி படங்களை அவர் டைரக்ட் செய்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, 175 படங்களில் இயக்குனர் மனோபாலா பல்வேறு கேரக்டர்களில் நடித்திருக்கிறார். என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் ஊர்க்காவலன் மூடு மந்திரம் மல்லுவேட்டி மைனர் சிறைப்பறவை மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என பல படங்களை இயக்கியவர்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான மதகஜ ராஜா படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடிகர் மனோபாலா காமெடி நடிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. சுந்தர் சி இயக்கிய பல படங்களில் மனோபாலா நடித்திருக்கிறார். அவரது மறைவுக்கு பிறகு 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த மதகஜ ராஜா காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் காந்தி கண்ணாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிகர் கேபிஒய் பாலா அறிமுகமாகி உள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கிடையே ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கேபிஒய் பாலா, இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா குறித்து தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் கேபிஒய் பாலா கூறியதாவது, ஒருமுறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாங்க நின்னுட்டு இருந்தோம். அப்படி நின்னுட்டு இருக்கும்போது மனோபாலா சாருக்கு பயங்கரமான கால்வலி. நான் அவரை நைனா என்றுதான் கூப்பிடுவேன். என்ன நைனா, கால் ரொம்ப வலிக்குதா என்று கேட்டேன். நீங்க எவ்ளோ பெரிய டைரக்டர், புரடியூசர் கால் வலிக்குதா என்று கேட்டேன். அப்போ அவர் ஒரு மேட்டர் சொன்னார். அதுக்கு அப்புறம்தான் நாமெல்லாம் ஒரு ஆளே இல்லை என்று எனக்கு தோன்றியது.
இங்க பார்ரா, பட்டரை தெரியுமா? பட்டரையில் இரும்பு அடிக்க பெரிய சுத்தி எடுத்து காலையில் இருந்து நைட் வரைக்கும் தூக்கி தூக்கி அடிப்பாங்க. அவங்களுக்கு 200 ரூபா தான் சம்பளம். ஆனா எனக்கு ஏஸியில சும்மா நின்னுட்டு போறதுக்கு லட்சம் ரூபா சம்பளம்டா. இது எவ்வளவு பெரிய கிப்ட். இதை கஷ்டம்ன்னு சொன்னா அது கடவுளை தப்பா சொல்ற மாதிரிடா என்று சொன்னார். அப்போதான் மத்தவங்க படற கஷ்டத்தை பார்க்கும் போது நம்ம கஷ்டம் ஒண்ணுமே இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன் என்று நடிகர் கேபிஒய் பாலா கூறியிருக்கிறார்.





