தமிழ் சினிமாவில் தரமான என்டர்டைன்மென்ட் திரைப்படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரர் கே எஸ் ரவிக்குமார். புரியாத புதிர் என்னும் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அவர், அங்கிருந்து தனது சக்சஸ் ஃபார்முலாவை ஆரம்பித்தார்.
முன்னணி நடிகர்கள் ஆன ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கும் அவர், சரத்குமார் உடன் இணைந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினியுடன் இணைந்து அவர் எடுத்த முத்து படையப்பா உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி விழா கண்டன.
இதே போல் கமல்ஹாசனை வைத்து அவ்வை சண்முகி பஞ்சதந்திரம் தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களையும் கே எஸ் ரவிக்குமார் கொடுத்திருக்கிறார். கிராமத்து பின்னணி சார்ந்த கதை அமைப்பதில் வல்லவர் ஆன கே எஸ் ரவிக்குமார், 1994 ஆம் ஆண்டு நாட்டாமை திரைப்படத்தை நமக்கு கொடுத்தார்.
சரத்குமார் அண்ணன் தம்பி என இரண்டு கதாபாத்திரங்களிலும், குஷ்பூ மீனா கவுண்டமணி செந்தில் மனோரமா பொன்னம்பலம் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். நீதி தவறியதால் உயிரிழக்கும் சரத்குமாரின் கதாபாத்திரம் மிக அழுத்தமாக பதிந்ததால், நாட்டாமை திரைப்படத்தை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர்.
அப்போது அல்ல இன்று வரை அந்த திரைப்படத்தின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவுண்டமணி செந்தில் காமெடி. டேய் தகப்பா என்று கவுண்டமணி கூறும் ஒவ்வொரு இடமும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அந்தப் படத்தின் ஒரு காட்சியில், இடம்பெற்றிருக்கும் மிக்சர் மாமா கேரக்டரும் மிகப் பிரபலம்.
இந்த நிலையில் அந்த கேரக்டர் யார் என்பதை தற்போது கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார். மிச்சர் மாமா கதாபாத்திரத்தில் நடித்தவர், எனது யூனிட்டில் உள்ள எலக்ட்ரிசியன் தான். நான் சொல்லும் பொத்தானை ஆன் செய்வார் அல்லது ஆஃப் செய்வார் இதுதான் அவரது வேலை. வேறு எந்த பணியையும் அவர் பார்க்க மாட்டார். இந்த காட்சிக்கு தேவைப்படும்போது அவர்தான் எனக்கு ஞாபகம் வந்தார். உடனடியாக அவர் நெற்றியில் பட்டை போட்டு விட்டு கையில் மிக்சரைக் கொடுத்து விட்டேன். அதுவும் சரியாக ஒர்க் அவுட் ஆனது. படம் ரிலீஸ் ஆனதும் அவர் என்னை வீட்டிற்கு தேடிவந்து பார்த்து விட்டு சென்றார் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.





