தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள மணிகண்டன் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். அதிலும் தன்னை ரசிகர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்களை தேர்வு செய்தும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் பெரிய நடிகர்களாக வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகர்களில் மணிகண்டனும் ஒருவராக இருக்கிறார்.
காதலும் கடந்து போகும் நெற்றிக்கண் படங்களை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த மணிகண்டனுக்கு நல்ல அடையாளம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. தொடர்ந்து அவரது நடிப்பில் ஜெய்பீம் படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து குட் நைட் லவ்வர் படங்களின் அபரிமிதமான வெற்றிக்கு பிறகு மணிகண்டன் நடித்த படம்தான் குடும்பஸ்தன். நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கோவையை சேர்ந்த ராஜேஷ்வர் காளிசாமி அறிமுக இயக்குனராக குடும்பஸ்தன் படத்தை இயக்கி இருந்தார்.
நடிகர் பிரசன்னா பாலச்சந்திரன் கதை வசனம் எழுதியிருந்தார்.
கோவையில் நடக்கும் கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நாயகனாக மணிகண்டன் அவரது அப்பாவாக ஆர் சுந்தர்ராஜன் முக்கிய கேரக்டரில் குரு சோமசுந்தரம் மற்றும் நாயகியாக சான்வி மேக்னா ஆகியோர் நடித்திருந்தனர். மற்ற கேரக்டர்கள் எல்லாம் ஏற்கனவே நக்கலைட்ஸ் தொடரில் நடித்த துணை நடிகர் நடிகைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு இளம் குடும்பஸ்தனின் கதைதான் இது. அந்த கேரக்டரில் மணிகண்டன் அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மணிகண்டனும் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமியும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அடுத்து இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண முடிவு செய்திருக்கின்றனர். இந்த படமும் கோவையில்தான் உருவாகிறது. இன்னும் தயாரிப்பு நிறுவனம் மட்டும் முடிவாகவில்லை. சினிமாக்காரன் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்குமா, அல்லது வேறு நிறுவனம் தயாரிக்குமா என்பது முடிவான பிறகு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும்.





