ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிவாகை சூடினாலும் ஒன்று இரண்டு திரைப்படங்கள் தான் இந்திய அளவில் பேசப்பட்டு வசூலிலும் சாதனை படைக்கின்றன. இதில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான திரைப்படங்களை நாம் பட்டியலிட்டு கூறலாம். அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம், முதல்முறையாக இந்திய சினிமாவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் குவித்தது.
இதன்பிறகு தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் சாதனை படைக்க, அதனுடன் கைகோர்த்தது கேஜிஎப் திரைப்படம். இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்தது தான் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம். சுகுமாரன் இயக்கத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தியும், ஒரு சாதாரண இளைஞன் எப்படி மிகப்பெரிய தாதாவாகினான் என்பதையும் கூறும் திரைப்படம் புஷ்பா. இதன் முதல் பாகம், தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக அதில் புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் மிரட்டி இருந்தார் என்று கூறலாம்.
காட்சிக்கு காட்சி தாடியை சீவிக்கொண்டு அவர் புஷ்பா என்று கூறுவதும், பஞ்ச் வசனங்களும் திரையரங்குகளை தெறிக்க விட்டன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் நறுக்கென்று அமைந்ததால், புஷ்பா படத்தின் முதல் பாகம் வாகை சூடியது. இதன் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
குறுகிய காலத்திலேயே 1000 கோடி ரூபாய் என்னும் வசூலை அது ஈட்ட, பலரும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச ஆரம்பித்தார்கள். முந்தைய பாகத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜுன், இதிலும் அதே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இப்படியான சூழலில் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லியுடன் இணைய போகிறார் என்று கூறி இருக்கும் அவர், அதற்கு அடுத்ததாக திரி விக்ரமுடன் படம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதன் பிறகு தான் புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என்றும் கூறியிருக்கிறார். 2028 ஆம் ஆண்டு இதனை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் மைத்திரி மூவிஸ் நிறுவனம் சார்பில் அவர் கூறியுள்ளார்.





