நாளை தை மாதம் பிறக்கிறது. முதல் நாளில் தை மகளை வரவேற்கும் தை பொங்கல், 2வது நாளில் மாட்டுப்பொங்கல், 3வது நாளில் காணும் பொங்கல் என, இந்த பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த அயலான், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் ஆகிய 4 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் அயலான் படத்துக்கு மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் வன்முறை காட்சிகள் மிக அதிகமாக இருப்பதால், குடும்பத்துடன் செல்பவர்கள் அதிகமாக அயலான் படத்தை தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் படம், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த படம் பிப்ரவரி 9ம் தேதிக்கு தான் ரிலீஸ் ஆகும் என்று கூறியதால் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
ஏனெனில் ரஜினிகாந்த், இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மொத்தம் 22 காட்சிகளில் நடித்திருக்கும் அவர், படம் முழுக்க 45 நிமிடங்கள் வருகிறார். அதனால் படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ரஜினி நடித்த காட்சிகள் இடம்பெறுவதால் இது, ரஜினி படம் பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு தரும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி, இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனால்தான் வெற்றி பெறும் என்று இல்லை. இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், பெரிய அளவில் வெற்றி பெறும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார். இது அவர்களுக்கு பயங்கர உற்சாகத்தை தந்துள்ளது.
லால் சலாம் படத்தை பண்டிகை விழா படமாக எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாளை ( 15ம் தேதி) லால் சலாம் படத்தின் 2வது பாடல் காட்சி வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ரஜினி தரும் பொங்கல் பரிசாக இருக்கிறது என்று பலரும் இந்த போஸ்ட்டை வைரலாக்கி வருகின்றனர்.





