நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தக்ஃலைப். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து இந்த படத்தில் சிலம்பரசன் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷாவும் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு பெறவில்லை.
இதைத்தொடர்ந்து மணிரத்தினம் படத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த சிலம்பரசன், தக்லைஃப் தந்த படுதோல்வியால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங்கு பெரியசாமி, அடுத்து அஸ்வத் மாரிமுத்து என 3 இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக தனது பிறந்த நாளில் நடிகர் சிம்புவே அப்டேட் தந்தார்.
ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்ய இருந்த சிம்புவின் எஸ்டிஆர் 49 படம் எதிர்பாராத சில காரணங்களால் கைவிடப்பட்டது. அந்த படத்தில் நடிக்காமல் நடிகர் சிலம்பரசன் விலகிவிட்டார். இப்போது அந்த கதையில்தான் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்யும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆனார். சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு அரசன் என டைட்டில் வைக்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் முதல்முறையாக அரசன் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார்.
அரசன் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வருகிறது. இந்த படத்தில் இயக்குனர் நெல்சன், டைரக்டர் கேரக்டரிலேயே நடிப்பதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து படப்பிடிப்பு தடைப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அரசன் படம் குறித்த ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அரசன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் வருகிற 9ம் தேதி துவங்க இருப்பதாகவும் அதற்கு முன்பாக வருகிற 8ம் தேதி படத்துக்கு பூஜை போட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சிம்புவே கூறியிருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.





