வழக்கமான தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதாவது சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த படத்தை 2ம் பாகம் எடுத்தால் அந்த படம் கண்டிப்பாக சொதப்பி விடும். முதல் படம் போல பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெறாது என்பதுதான் அது. ஒரு விதத்தில் அது உண்மையாகவும் இருக்கிறது.
ஏனெனில் சந்திரமுகி 2 விடுதலை 2 இந்தியன் 2 பொன்னியின் செல்வன் 2 போன்ற பல படங்கள் 2ம் பாகமாக வெளிவந்து ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கின்றன. அதே நேரத்தில் அரண்மனை காஞ்சனா டிமாண்டி காலனி சிங்கம் பாகுபலி போன்ற சில படங்கள் 2ம் பாகங்களாக வந்து பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.
கடந்த 2015ம் ஆண்டில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம்தான் டிமாண்டி காலனி. திரில் திகில் கதைக்களத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இதில் சில காட்சிகள் ரசிகர்களை மிரட்டி விட்டன.
டிமாண்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி 2. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் அருள்நிதி பிரியா பவானி சங்கர் அருண்பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகத்தை விட 2ம் பாகம் பெரிய அளவில் ரசிகர்களை மிரட்டி விட்டது.
டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் டிமாண்டி காலனி 3 டிமாண்டி காலனி 4 டிமாண்டி காலனி 5 வரை இயக்குனர் அஜய் ஞானமுத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்து வைத்திருக்கிறார். டிமாண்டி காலனி 2ம் பாகம் பெரிய வெற்றியை பெற்றால் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று படத்தின் ஹீரோ நடிகர் அருள்நிதி கூறியிருந்தார்.
தற்போது டிமாண்டி காலனி படத்தின் 3ம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான முன்கட்ட ஆரம்ப பணிகள் துவங்கி விட்டன. கதாநாயகனாக மீண்டும் அருள்நிதியே நடிக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. 2026ம் ஆண்டில் டிமாண்டி காலனி 3 திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.





