நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் கடந்த மாதம் 6ம் தேதி வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படம் அஜீத்குமார் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பின் வெளியானது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வரவேற்பை பெறாமல் ரூ. 200 கோடி வரை பலத்த நஷ்டத்தை சந்தித்தது.
இதையடுத்து வருகிற ஏப்ரல் 10ம் தேதி அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
இந்த படத்தில் நடிகர் அஜீத்குமார் 3 கேரக்டர்களில் நடித்திருக்கிறார். திரிஷா சுனில் பிரசன்னா பிரபு அர்ஜூன்தாஸ் நடித்துள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகை சிம்ரன் நடிகர் சிலம்பரசன் ஆகியோர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இன்னும் சில சுவாரசியங்களை ஆதிக் ரவிச்சந்திரன் ரகசியமாக செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரத்தில் வெளியான குட்பேட் அக்லி படத்தின் டீசர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. வரும் 18ம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இம்மாத இறுதியில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே குட்பேட் அக்லி படம் குறித்து முக்கிய தகவலாக இந்த படத்தை தமிழ்நாட்டில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே போல் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா என பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அஜீத்குமாரின் கடந்தகால படங்களை விட குட்பேட் அக்லி படத்தை அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் திரையிடவும் அதிகபட்சமாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய படங்கள் வரிசையில் இந்த படத்தை கொண்டு வரவும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். ஆனால் படம் பெரிய அளவில் பிளாக் பஸ்டர் மூவியாக மாறினால் ரூ. 1000 கோடி வசூலை தொடும் படமாக அமையும் என்று அஜீத்குமார் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





