தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் தேவா பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர். குறிப்பாக அண்ணாமலை பாட்ஷா அருணாச்சலம் சூரியன் காதல் கோட்டை என கடந்த 1990களில் வெளிவந்த பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை தந்தவர். இன்றும் தேவா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
கானா இசை பாடல்களுக்கு பெருமை சேர்த்தவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காலகட்டத்தில்தான் கானா பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. சமீப காலமாக பல்வேறு முக்கிய தலைநகரங்களில், பல வெளிநாடுகளில் தொடர்ந்து தனது இசை கச்சேரிகளை தேனிசை தென்றல் தேவா நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இசையமைப்பாளர் தேவாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் அவரை கௌரவித்தது. இது ஒரு தமிழ் இசைக்கலைஞருக்கு மட்டும் வழங்கப்படும் மரியாதையாக இல்லாமல் தமிழ்நாட்டு இசை மற்றும் பாரம்பரியத்துக்கு கிடைத்த கௌரவம் என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா பாராளுமன்ற தோட்டத்தில் நடந்த இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் இசை ரசிகர்கள் ஆஸ்திரேலிய அரசு தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய நிகழ்வாக பாராளுமன்ற அவை தலைவர் இருக்கையில் இசையமைப்பாளர் தேவா அமர வைக்கப்பட்டு அவரது கையில் மதிப்பிற்குரிய செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவா தனது நன்றியை நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவர் பேசுகையில், இந்த மரியாதை எனக்கு தனிப்பட்ட வெற்றிக்கு அல்ல. இது உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞனுக்கும் சொந்தமானது என்று கூறினார்.
மேலும் தனது 36 ஆண்டுகளுக்கு மேலான இசை பயணத்தில் ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவே என்னுடைய மிகப்பெரிய வலிமை. இந்த மரியாதையை என் ரசிகர்களுக்கும் என் இசை குழுவுக்கும் சமர்பிக்கிறேன் என்றும் தேனிசை தென்றல் தேவா கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் மரியாதை தரப்படுவது என்பதை இந்திய இசைக்கலைஞர் வழங்கப்படும் அபூர்வமான அங்கீகாரமாகும். இது தமிழ் இசை கலைஞர் தேவாவுக்கு கிடைத்ததற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





