காமெடி நடிகர் கிங்காங், ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி படத்தில் அறிமுகமானார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் கிங்காங் நடித்துள்ளார். நடிகர் கிங்காங் சங்கருக்கு கலா என்ற மனைவியும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடிகர் கிங்காங் மகள் திருமணம் சென்னை அசோக் பில்லர் பகுதியிலுள்ள மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் நடிகர் கிங்காங்கின் உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்துக்கு வரவில்லை. அரசியல் தலைவர்களில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கிங்காங் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் பி ஜெயக்குமார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் விழாவுக்கு வந்து நேரில் வாழ்த்தினர்.
ஆனால் கிங்காங் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்காதது சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக நடிகர் கிங்காங் தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வரவேற்றார். அவர்களில் முன்னணி நட்சத்திரங்கள் யாருமே இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்துக்கொள்ளவில்லை.
துகுறித்து ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது. கிங்காங் சங்கர் எனும் முன் உதாரணம்; உயரம் குறித்த ஏளன பேச்சுக்கள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிய நடிகர். நகைச்சுவை மட்டும் இன்றி வெகுஜனங்களை ஈர்க்கும் நடனத்திலும் கெட்டிக்காரர். சினிமா வாய்ப்பு இல்லாத நேரங்களில் ஊர் ஊராகச் சென்று தனது கலைக்குழுவை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். சிறுக சிறுக சேமித்த பணத்தில் சென்னையின் மையப்பகுதியில் சொந்த வீடு கட்டியவர்.
ரஜினி கமல் ஷாருக்கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர். தனது முதல் மகளின் திருமணத்திற்கு வருமாறு பல சினிமா பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்தார். ஆனால் சொல்லி வைத்தது போல பலரும் போகவில்லை. காரணம், இவர் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர். உயரம் குறைவானவர். செல்வந்தர் இல்லை. பல கிலோமீட்டர் பயணித்து நேரில் பத்திரிகை வைத்தவரை மதித்து திருமணத்திற்கு செல்ல ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு கூடவா மனம் வரவில்லை?
சக திரைக்கலைஞரை இவர்கள் மதிக்கும் லட்சணம் இதுதான். ஆனால் ஆடியோ லாஞ்ச் மேடைகளில் மனிதநேயம், சமத்துவம் பற்றி இந்த யோக்கியர்கள் பேசி அறுப்பார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டது கிங்காங் சங்கருக்கு மனநிறைவாக இருந்திருக்கும். உங்கள் சக்திக்கு மீறி பல விஷயங்களை சாதித்து இச்சமுகத்திற்கு முன் உதாரணமாக திகழ்கிறீர்கள் சங்கர். உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் என்று அந்த பதிவில் ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





