மாஸ்டர் படத்தினை தொடர்ந்து இளைய தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள படம் “லியோ”. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

செவன் கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்த “லியோ” திரைப்படமானது வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த வேளையில் தற்போது பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அதோடு ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளரான அனிருத் “நான் ரெடி தான் வரவா” என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். நான் ரெடி தான் வரவா பாடல் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ள வேளையில் தற்போது அனைவரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடைபெறும்? என்றே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி : இந்த “லியோ” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதம் இறுதியிலோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதோடு இம்முறை இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறாமல் திருச்சி, மதுரை அல்லது கோயம்புத்தூர் போன்ற ஏதாவது ஒரு பெரிய நகரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவி ஒளிபரப்ப உள்ளதாகவும் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் விஜய் ரசிகர்களுக்காக ஒரு “குட்டி ஸ்டோரி” சொல்வதும் வழக்கம். அந்தவகையில் இந்த லியோ இசைவெளியீட்டு விழாவிலும் விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.





