ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் நேற்று “ஜெயிலர்” திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு விஜய் ரசிகர்களை சற்று சூடாக்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். நேற்று கூட ஒரு திரையரங்கில் “ஜெயிலர்” படம் நன்றாக இல்லை என்று கூறிய ஒரு விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய சம்பவம் குறித்த செய்திகள் வெளிவந்து வைரல் ஆகி வருகிறது.

இவ்வாறு “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றி விஜய் ரசிகர்களுக்கு சற்று கலக்கத்தைத்தான் தந்துள்ளது. இதற்கெல்லாம் மொத்தமாக “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் கூறவுள்ள குட்டி ஸ்டோரிதான் முழு முதல் தீர்வு என்று விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரை அல்லது கோவையில் நடக்கும் எனவும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் மாஸ் ஆக சென்று விழாவை சிறப்பித்துவிடலாம் என்றும் விஜய் ரசிகர்கள் ஆசையோடு இருந்தனர்.

ஆனால் தற்போது விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியா நாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.
மேலும் “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடத்தலாம் எனவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதனால் விஜய் ரசிகர்கள் மலேசியாவிற்குச் சென்று எப்படி விஜய்யை பார்ப்பது என்று மிகவும் கலக்கத்தோடு இருக்கிறார்களாம். வசதி படைத்தவர்கள் சென்று பார்த்துவிடுவார்கள், வசதி இல்லாதவர்களால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.





