“லியோ” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரவுள்ளது. அனிருத் இசையில் இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இந்த பாடலுக்காக ஒரு புரொமோ ஒன்று வெளியானது. அந்த புரொமோவில் இடம்பெற்ற பாடல் வரிகளை தற்போது இணையவாசிகள் டீகோட் செய்து வருகின்றனர்.

முதல் வரியான “நான் ரெடிதான் வரவா?” என்ற வரியில் விஜய் தான் அரசியலுக்கு வர ரெடி, வரவா? என கேட்பதாக பலரும் கூறி வருகின்றனர். அதே போல் “அண்ணன்தான் தனியா வரவா?” என்ற வரியில் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனியாக அரசியலில் களமிறங்கட்டுமா? எனகேட்பதாக பல டீகோடிங் வேலைகளில் ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த பாடலில் இடம்பெற்ற “தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா” என்று இடம்பெற்ற ஒரு வரியை குறித்து கூறியுள்ளார். அதாவது தேள் கொடுக்கு சிங்கம் என்றால் “விக்ரம்” திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் என்று பொருளாம். ஆதலால் “லியோ” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் நீட்சியாக சூர்யா நடித்துள்ளார் என்று கூறுகிறார் செய்யாறு பாலு.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தில் அவர் அதற்கு முன்பு இயக்கிய “கைதி” திரைப்படத்தின் தொடர்ச்சி இடம்பெற்றிருந்தது. ஆதலால் “விக்ரம்” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் அடங்குவதாக அறியப்பட்டது.

இதனை தொடர்ந்து “லியோ” திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்குள் வருமா? வராதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே கிளம்பியுள்ள நிலையில் தற்போது செய்யாறு பாலு, “லியோ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியான சூர்யா இடம்பெறுகிறார்” என்று கூறியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா தேள் உருவத்தை தனது உடலில் பச்சை குத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





