நடிகர் விஜய் சேதுபதிக்கு அவரது 50வது படம் மகாராஜா தந்த மிகப்பெரிய வெற்றி, அவருக்கான பட வாய்ப்புகளை குவித்து வருகிறது. எனினும் நல்ல படங்களை, நல்ல இயக்குனர்களை தேர்வு செய்துதான் கமிட் ஆகிறார். ஏனெனில் எந்த படம் என்றாலும் ஒத்துக்கொண்ட ஒரு காலகட்டம்தான் அவரது சரிவுக்கும் காரணமானது.
இப்போது அதில் தெளிவான விஜய் சேதுபதி, இனி வில்லனாகவும் கேமியோ ரோல்களிலும் நடிப்பதில்லை என்ற முக்கிய முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டார். அதனால் இனி வரும் படங்களில் கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பது என்ற தீர்மானத்தில் இருக்கிறார்.
அந்த வகையில் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2ம் பாகம் வரும் டிசம்பரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் 3ம் பாகமும் வர வாய்ப்புள்ளதால் அதிலும் விஜய் சேதுபதி பங்களிப்பு தொடரும்.
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது விஜய் சேதுபதி புதிதாக கமிட் ஆகியுள்ள படம் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கும் புதிய படம். இதை பாண்டிராஜ் இயக்குகிறார். மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு நடிகை நித்யாமேனன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிப்பது இந்த படம் பற்றி சுவாரசியமான தகவல்.
இதைத் தொடர்ந்து அயலான் பட இயக்குனர் ரவிக்குமார், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜா மற்றும் மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் ஆகியோரது படங்களில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகி இருக்கிறார்.
ஏற்கனவே நடித்து வரும் படங்கள், இப்போது புதிதாக கமிட் ஆன 4 படங்கள் என விஜய் சேதுபதிக்கு இன்னும் 3 ஆண்டுகளுக்கு படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் பிக்பாஸ் வரும் அக்டோபரில் துவங்குகிறது. அதற்காக வாரந்தோறும் ஒருநாள் ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாயமும், அதற்காக தயாரிப்புக்காக ஒருநாளும் அவருக்கு தேவைப்படலாம். இப்படி படு பிஸியாக இருந்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.





