வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் கடைசி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
லியோ திரைப்படத்தின் எதிர்பார்ப்புக்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். விக்ரம் படத்தில் அவர் வைத்த எல் சி யு என்னும் கான்செப்ட், இதிலும் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம் படத்தில் விக்ரம் படத்தில் நடித்த சில முக்கிய கதாபாத்திரங்களும், லியோவில் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் கிட்டத்தட்ட அது எல் சி யு-தான் என்பது உறுதியாகி இருக்கிறது.
படத்தில் விஜயுடன் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் என்னும் ரோலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் ஆகிய பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்றது.
படத்திற்கான அப்டேட்களை ஆரம்பத்தில் இருந்து தயாரிப்பாளர் லலித் குமார், அறிவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பு மற்றும் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நா ரெடி தான் பாடல் ஆகியவை வெளியானது. இந்தப் பாடலின் சில வரிகள், மது மற்றும் புகை பிடிப்பதை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி, தணிக்கை குழு சில வரிகளை நீக்கியது.
இதனால் திரைப்படம் வெளியாகும்போது, அந்த வரிகளுக்கு பதிலாக வேறு சில வரிகள் இணைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சமீபத்தில் சென்னையில் பேசிய லலித் குமார், இந்த விவகாரம் குறித்து பின்னர் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். வரும் வாரத்தில் இருந்து படம் ரிலீஸ் ஆகும் வரை அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாவது பாடல் வரும் 18ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 30-ம் தேதி இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் லியோ படம் அதிகாலை வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் காட்சி இல்லாத நிலையில், லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட இருக்கிறதாம். அதேசமயம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அதிகாலைக் காட்சி உள்ளதாம். ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து லியோவுக்கும் அதிகாலை காட்சி இல்லாததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.





