இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த வியாழன் அன்று லியோ திரைப்படம் வெளியானது. இதில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப், பிரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக லியோ ரிலீஸ் ஆனது.
இந்த படம் ரிலீஸ் ஆன அன்று, தமிழகத்தில் லியோ திரையிட்ட தியேட்டர்களின் முன், விஜய் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி இந்த படத்தை வரவேற்றனர். தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சி இல்லாததால், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுக்கு சென்று அதிகாலை சிறப்பு காட்சி பார்த்துவிட்டு திரும்பினர்.
இந்த படத்தை பொருத்தவரை, விஜய் ரசிகர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் படமாக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் படமாக எதிர்பார்த்துச் சென்ற பொதுவான ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. விக்ரம், கைதி போன்று படம் படு மாஸாக இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு அதிருப்தியே கிடைத்தது.
ஏனெனில், படத்தின் பாதி வரை இருந்த திரைக்கதை ஓட்டமும், காட்சியமைப்பும், விறுவிறுப்பும் படம் போனதே தெரியாத அளவுக்கு நேர்த்தியாக, சிறப்பாக இருந்தது. ஆனால், படத்தின் பின்பகுதி அதாவது இடைவேளைக்கு பிறகு, பிரேக் இல்லாத லோடு ஏற்றிய லாரி போல, திரைக்கதை தாறுமாறாக ஓடியது.
வில்லன்கள் கூட்டம், அர்ஜூன் நடிப்பு, விஜய் ஓவர் ஆக்டிங், அண்ணன் தங்கை இரட்டையர், நரபலி, மகளை பலிகொடுக்க விரும்பும் தங்கை என, படத்தின் முதல் பாதிக்கும், பின் பாதிக்கும் சம்பந்தமே இல்லாததால் ரசிகர்கள், குழம்பி தவித்து போயினர். சில காட்சிகள் படத்தில் எதற்காக வருகிறது என்பதே ரசிகர்களுக்கு புரியவில்லை.
இந்நிலையில், லியோ படத்தின் வசூல் முதல் நாளில் மட்டும் அதாவது படம் ரிலீஸ் ஆன 19ம் தேதியன்று 148.5 கோடி ரூபாயை தொட்டது. கடந்த 4 நாட்களில் 19, 20, 21. 22ம் தேதிகளில், மொத்தம் 404 கோடி ரூபாயை கடந்துள்ளது. இது மிகப்பெரிய வசூல் வேட்டையாக பார்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான தியேட்டர்களில் ரசிகர் கூட்டமின்றி காத்து வாங்குகிற நிலையில், எப்படி இது சாத்தியம் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





