சினிமா நடிகர்களை பொருத்தவரை கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பிரபலங்களாக இருக்கின்றனர். ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். ஒரு படத்தில் நடிக்க 3 மாதம் அல்லது 4 மாதம் என படப்பிடிப்பில் பங்கேற்கும் அவர்கள், 150 கோடி ரூபாய் சம்பளம் என்பது நிச்சயமாக அவர்கள் உழைப்புக்கு கிடைக்கும் 100 மடங்கு லாபமாக தான் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இதை உணர்ந்துதான் சில நடிகர்கள் தங்களது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி உதவுகின்றனர். மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக 70 வயதுகளை கடந்தும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தனது அறக்கட்டளை மூலமாகவும் தனது சொந்த மருத்துவமனை மூலமாகவும் பல்வேறு விதமான உதவிகளை, வசதி இல்லாத எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.
சமீபத்தில் தனது நண்பர் சமது என்பவர் ஏற்பாடு செய்திருந்த ட்ரூத் மாங்கல்யம் என்ற மெகா திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அனைத்து மதங்களையும் சார்ந்த 40 ஜோடிகளுக்கு நடிகர் மம்முட்டி தலைமையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில், மனங்களை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமும் நடந்தது.
சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்தனர். பலர் தங்களது வீடு, வாழ்வாதாரத்தை இழந்தனர். அதில் சுருதி என்கிற பெண் நிலச்சரிவால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவித்தார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது நண்பர் ஜென்சன் என்பவர் துணை நின்றார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் அடுத்த சில நாட்களில் ஜென்சன் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது சுருதிக்கு பேரிடியாக இருந்தது.
அந்த நேரத்தில் நடிகர் மம்முட்டி சுருதிக்கு ஆறுதல் கூறி எப்போதும் அவருக்கு தான் பக்கபலமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த மெகா திருமணத்தில் அந்த 40 ஜோடிகளில் ஒன்றாக சுருதி – ஜென்சன் திருமணத்தையும் நடத்த மம்முட்டி திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவ்வாறு நடக்க முடியாமல் போய் விட்டது. எனினும் இந்த மெகா திருமண நிகழ்வுக்கு சுருதியையும் அழைத்திருந்த மம்முட்டி அவரை தன் பக்கத்திலேயே அமர வைத்துக் கொண்டார்.
மேலும் இந்த திருமண நிகழ்வின் போது தனது அறக்கட்டளை சார்பாக ஒரு மிகப்பெரிய தொகையை சுருதிக்கு மம்முட்டி வழங்கினார். அப்போது மம்முட்டி இது வெறும் பேப்பர்தான், ஆனால் அன்பின் அடையாளம் என்று கூறி சுருதிக்கு மீண்டும் ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால் நம்மூர் ரஜினி கமல் போன்றவர்கள் இதுபோல் நலத்திட்ட உதவிகளையோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதையோ ஒருபோதும் நினைத்துப் பார்க்க கூட நேரமில்லாவர்களாக இருக்கின்றனர். அதுதான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கசப்பான அனுபவமாக இருந்து வருகிறது.





