தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்தான் இப்போதைக்கு நம்பர் ஒன் என்ற பொசிஷனில் இருக்கிறார். ஆனால் கோட் படத்தை தொடர்ந்து, தனது 69 படத்தில் கடைசியாக நடிக்கும் விஜய், அதன்பிறகு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல்வாதியாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தலைவராக வழிநடத்த உள்ளார்.
விஜய், அரசியலுக்கு சென்றுவிட்டதால் இனி அவரது இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நடிகர்கள் சூர்யா, சிலம்பரசன், விஜய் சேதுபதி, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பெயர்கள் அதில் அடிபட்டது. ஆனால் இறுதியில் விஜய் இடத்தை பிடிக்க சரியான நடிகராக சிவகார்த்திகேயன்தான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
அது மட்டுமின்றி, விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துக் கொள்வதால், சிவகார்த்திகேயனுக்கு இடத்துக்கு வளர்ந்து வரும் நடிகராக உள்ள கவின் வந்துவிடுவார் என்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் சிவகார்த்திகேயனை போலவே, நடிகர் கவினும் விஜய் டிவியில் இருந்து வந்தவர் என்ற லாஜிக் இதில் சொல்லப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக, இப்போது சிவகார்த்திகேயன் இடத்துக்கு நடிகர் சூரி வந்துவிட்டார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கு காரணம், சூரி நடிப்பில் வெளிவந்துள்ள கருடன் படம் ரிலீஸின் போது ஒரு பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. அதை சூரிதான் முன்னின்று சரிசெய்து, ரூ. 7 கோடிக்கு கடன் பத்திரம் எழுதிக் கொடுத்து அந்த படம் ரிலீஸாக உதவியிருக்கிறார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிக்குமார், உன்னிமுகுந்தன், ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ள கருடன் படம், 4 தினங்களுக்கு முன் வெளியானது. இந்த படத்தின் பைனான்ஸ் தேவைக்காக, மதுரை அன்பு என்ற சினிமா பைனான்ஸியரிடம், படத்தயாரிப்பாளர் தரப்பில் ரூ. 20 கோடி கடனாக வாங்கியுள்ளனர். கடனுடன் வட்டி ரூ. 4.5 கோடி என 24.5 கோடி ரூபாய் கட்ட வேண்டும். ஆனால் 7 கோடி ரூபாய் பணம் போதவில்லை.
அப்போது படத்தின் நாயகன் நிலமையை தெரிந்துக்கொண்டு, ரூ. 7 கோடிக்கு கடன் பத்திரங்களில் கையெழுத்திட்டு அந்த பணத்துக்கு பொறுப்பேற்று பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்து, கருடன் படம் வெளிவர உதவியிருக்கிறார். கருடன் படம், சூரியின் மேலாளர் தயாரித்த படம் என்றும் கூறப்படுகிறது. இதை சிவகார்த்திகேயன், தனது படங்கள் ரிலீஸின் போது பலமுறை செய்திருக்கிறார் என்பதால், அவரது இடத்தை சூரி பிடித்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.





