மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. வரும் 19 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், லியோ குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனியார் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது,
நான் டிரைலரை முதல் முறையாக தளபதி விஜய்யிடம்தான் காட்டினேன். அவருக்கு டிரைலர் மிகவும் பிடித்திருந்ததால் அதனை தொடர்ந்து மூன்று முறை பார்த்தார். லியோ திரைப்படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. இதேபோல் டிரைலரையும் இரண்டு நிமிடங்கள் 43 வினாடிகள் ஓடுவது போல் கட் செய்தோம்.
எனக்கும் தளபதி விஜய்க்கும் பிரச்சனை என்ற வதந்தி பரவியது. இதை நாங்கள் இருவரும் சேர்ந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம். நான் நிறைய நடிகர்களுடன் பணி புரிந்துள்ளேன். ஆனால் ஒரே ஒருவரை மட்டும் தான் அண்ணா என்று அழைக்கிறேன், அது தளபதி விஜய் அண்ணா அவர்கள்தான்.
லியோவிற்காக ஒரு கிடங்கில் 20 நாட்கள் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். தளபதி விஜய் அண்ணா இது போன்ற ஒரு சண்டைக் காட்சியில் இதற்கு முன்பு நடித்ததில்லை. அந்த சண்டைக் காட்சிக்காக விஜய் நிறைய மெனக்கெட்டார். குடோன் சண்டைக் காட்சியில், 150 பேர் அவரை உருட்டி மேலே இழுப்பார்கள். அவருக்கு பல கீறல்கள் ஏற்பட்டன. ஆனால் அவர் அதை எதிர்கொண்டு பணியாற்றினார்.
விஜய் அண்ணாவிடம் உங்களுக்கு இந்த சண்டைக்காட்சி துன்புறுத்தலாக இருக்கிறதா என்று கேட்டேன். அவர் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். விஜய் அண்ணா படத்தின் பூஜையிலேயே என்னிடமும் அன்பறிவு மாஸ்டரிடமும் எந்தவொரு டூப்பும் இல்லாமல் நானே ஆக்சன் காட்சியில் ஈடுபடுவதாக கூறினார்.
அப்போது பேட்டியின் நடுவில் குறுக்கிட்ட தொகுப்பாளர், லியோ திரைப்படத்தில் கமலஹாசன் டப்பிங் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளதே அது உண்மைதானா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய லோகேஷ், படம் ரிலீஸ் ஆக இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கிறது. அதன் பிறகு நீங்களே தெரிந்து கொள்வீர்கள். ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்க நிறைய காட்சிகளை நாங்கள் வைத்துள்ளோம். தணிக்கை பணிகள் நடைபெறும் போது நான் கமல் சாரை சந்தித்து பேசினேன்.
விஜய்க்கு என்று குடும்பங்கள் குழந்தைகள் என தனி ரசிகர் பட்டாளம் உள்ளதே, அவர் இந்த படத்தின் நடிப்பாரா என எனக்குள்ளே ஏராளமான கேள்விகள் எழுந்தன. இது பற்றி நாங்கள் மாஸ்டர் திரைப்படத்தின் போதே பேசி இருந்தோம். அப்போதே இதை பண்ணலாம் என்று விஜய் தைரியமாக கூறினார். எனது முந்தைய திரைப்படங்களைப் போல லியோவிலும் பிரியாணி காட்சி இருக்கும். ரசிகர்கள் எனது படத்தில் அது இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதனாலேயே லியோவிலும் இதை கடைப்பிடித்து உள்ளேன்.
விக்ரம் திரைப்படத்தில் மிகப்பெரிய வில்லன் ரோலக்ஸ் தான். இதனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவை வைத்து தனி படம் ஒன்றை எடுக்க நான் திட்டமிட்டு இருக்கிறேன். லியோ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து நான் யோசிக்கவில்லை. கண்டிப்பாக அதை செய்வேன். இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்ற உள்ளேன். பிறகு கைதி படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன் இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.





