தமிழ் சினிமாவில் நடப்பாண்டு மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் தெலுங்கில் இருந்து நாகர்ஜூனா, மலையாளத்திலிருந்து சோபின் ஷாகிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
அனைத்திற்கும் மேலாக இந்தி திரை உலகில் இருந்து அமீர் கானை அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் தகா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறாராம். வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் மட்டுமே அவரது காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது. அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு மற்றும் மோனிகா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்று இருக்கின்றன.
வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் கூலி திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதில், இந்தத் திரைப்படத்தின் முதல் பாதி எமோஷனல் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். இரண்டாம் பாதி ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருக்கும்.
இந்த திரைப்படத்திற்காக நான் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இருக்கிறேன். எனது முந்தைய திரைப்படமான லியோ 600 கோடி ரூபாய் வசூல் செய்ததை வைத்து இந்த சம்பளம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இரண்டு ஆண்டுகள் நான் செலவழித்து உள்ளேன். கூலி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. அதேசமயம், ரசிகர்களின் 150 ரூபாய் முக்கியம் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
கூலி திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியிடப்படும். படம் வெளியாகும் ஆகஸ்ட் 14ஆம் தேதி, நான் மூன்று ஷோ பார்ப்பேன். அடுத்த நாள் நான் எஸ்கேப் ஆகி விடுவேன். எனது பள்ளி நண்பருடன் சில காலம் யாரும் தெரியாத இடத்திற்கு சென்று விடுவேன். அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறேன். பிறகு அமீர்கான் சாருடன் இணைந்து, சூப்பர் ஹீரோ கான்செப்ட் படத்தை இயக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





