தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இப்போதைக்கு டாப் லெவல் இயக்குநராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். அவர் இயக்குநராக முதல் படமான மாநகரம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து கைதி படம், ரசிகர்களின் படமாக இருந்தது. விக்ரம், மாஸ்டர், லியோ என 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.
கமல், விஜய், கார்த்தி என டாப் ஸ்டார் நடிகர்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்க உள்ளார். இதற்காக அவருக்கு பெசன்ட் நகரில் மாதம் ரூ. 2.75 லட்சம் வாடகையில் நட்சத்திர ஓட்டலில் சூட் ரூம் எடுத்து தந்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இப்போது அங்குதான் தங்கி அவர் ரஜினி 171க்கான ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்.
டைரக்டர் மகேந்திரன் மகன் ஜான் மகேந்திரன். இவரது விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படத்தை இயக்கியவர். இவரது மகன் ஆன்லைனில் சினிமா பயிற்சி பட்டறை நடத்தி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குநர்களை தனது பயிற்சி பட்டரைக்கு அழைத்து அவர்களை பயிற்சி வகுப்புகளில் பேச வைப்பது அவரது வழக்கமாக உள்ளது.
அவர் லோகேஷ் கனகராஜூக்கும் நெருங்கிய நண்பர் என்பதால், தனது பயிற்சி பட்டரைக்கு வந்து, பயிற்சி வகுப்பில் உங்கள் படங்களில் எல்சியு தோன்றிய விதம், எப்படி அந்த யோசனை வந்தது என்பது குறித்து ஒருமுறை பேசுங்கள் என்று அழைத்திருக்கிறார். அதற்கு லோகேஷ் கனகராஜூம் ஓகே சொல்லி விட்டார்.
இதுகுறித்து தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் பேசும்போது இதுபற்றி சொல்லி இருக்கிறார் லோகேஷ். உடனே அவர் அங்கு பேசுவது இருக்கட்டும். அதையே ஏன் நீ ஒரு டாகுமெண்டரி படமாக எடுக்க கூடாது என கேட்டிருக்கிறார். சட்டென லோகேஷூக்கும் அது சரியென பட்டிருக்கிறது. உடனடியாக அதற்கான வேலைகளை துவங்கி 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஒரு டாகுமென்டரி படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் படங்களில் எல்சியு உருவான விதம் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமென்டரி படத்தை பார்த்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது ஓடிடி தளத்தில் வௌியிட ரூ. 3கோடிக்கு விலை பேசி வாங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போன லோகேஷ் கனகராஜ், தனக்கு இந்த ஐடியா சொன்ன தனது நண்பருக்கும் ஒரு பெரிய தொகையை ஷேர் ஆக தந்திருக்கிறார். இந்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.





