ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் திரைப்படத்திற்கான தனது போர்சனை அவர் முடித்தார்.
இதில் மொயின் கான் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தில் நாயகர்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் பொங்கலன்று இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன், மலையாள நடிகை மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
என்கவுண்டர் மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள தரை ஓடுதளத் தொழிற்சாலையில் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது ரஜினியை பார்க்க அங்கு ஏராளமான திரண்டு இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறதாம். படத்தில் குமரி வட்டார வழக்கு மொழியை ரஜினிகாந்த் பேசுகிறாராம். இந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினிகாந்த் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் தலைவர் 171 குறித்து பேசி இருக்கும் லோகேஷ் கனகராஜ், எனது திரைப்பட வரிசையிலேயே இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். இது எனக்கு ஒரு சோதனை முயற்சியான படம் என்றே கூறலாம். நிச்சயம் இது எல்சியூ வில் வராது. தனித்துவமான திரைப்படமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை எல்சியு வில் இணைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் இந்த அறிவிப்பால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.





