இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் மாபெரும் வெற்றி, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. யார் இந்த டைரக்டர் என்று பலரும் பாராட்டி வரவேற்றனர். தொடர்ந்து அவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த 3 படங்களுமே லோகேஷ் கனகராஜூக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.
அதிலும் குறிப்பாக கைதி படம் வேறு ஜானரில் இருந்தது. கதாநாயகி இல்லை. படத்தில் பாட்டு இல்லை. படத்தின் 99 சதவீத காட்சிகள் இருட்டில் எடுக்கப்பட்டு இருந்தன. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி, சென்டிமென்ட் காட்சிகளும் நிறைய இருந்தன. ஒரு இரவில் நடப்பது மட்டும்தான் படத்தின் கதையாக இருந்தது. அதனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கார்த்திக்கும் இது திருப்புமுனை படமாக இருந்தது.
இந்த படத்துக்கு பிறகு, கமல் நடித்த விக்ரம் படம் இதுவரை கமல் நடித்த படங்களிலேயே அந்தளவுக்கு அபார வசூலை பெறவில்லை. அதனால் லோகேஷ் கனகராஜ் மீது கமலுக்கு ஏகப்பட்ட பாசம் ஏற்பட்டு அவருக்கு சொகுசு கார் வாங்கிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் கேமியோ ரோலில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.
ஆனால் இப்படி வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்து இயக்கிய படம் லியோ. விஜய் நடிப்பில் மெகா சொதப்பலான படம் என்றால் அந்த வரிசையில் இதுவும் ஒன்று. அதுவும் இடைவேளைக்கு பிறகு இரட்டை பிறவி, நரபலி போன்ற விஷயங்களை கொண்டு வந்ததால், ரசிகர்கள் மண்டை காய்ந்து போய்விட்டனர். இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு கதையை லோகேஷ் எப்படி கொண்டு வந்தார் என்றும் புலம்பித் தீர்த்தனர்.
இப்போது ரஜினி 171 படத்துக்காக ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே கமல்ஹாசன் தயாரிப்பில், அவரது மகள் ஸ்ருதிஹாசன் நடித்த இனிமேல் என்ற இசை ஆல்பத்தில், ஸ்ருதிஹாசனுடன் மிக நெருக்கமாக நடித்து, ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகிண்ணா நீயாண்ணா இப்படி என ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த கருங்காலி மாலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விக்ரம் படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றபோது வழியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அப்போது நண்பர் கலை இயக்குனர் சதீஷ், இந்த கருங்காலி மாலையை வாங்கிக்கொடுத்து, இதை அணிந்துக்கொள் என்றார். இதனால் உன்னை சுற்றியுள்ள கெட்ட சக்திகள் உன்னை நெருங்காது என்றார். நண்பர் கொடுத்ததால் அதை அணிந்திருக்கிறேன். மற்றபடி எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கையோ, விருப்பமோ இல்லை என்று கூறியிருக்கிறார்.





