மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த ஜூன் மாதம் விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் “மாமன்னன்’. இதில் வடிவேலு மாமன்னன் என்ற டைட்டில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில் “மாமன்னன்” திரைப்படத்தை குறித்து மேடையில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “தேவர் மகன் படத்தில் வரும் வடிவேலு கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சியாகவே மாமன்னன் வடிவேலு இருப்பார்” என கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு “மாமன்னன்” திரைப்படம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்தது. அதில் வடிவேலு மிக வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிய வந்தது. அதே போல் வடிவேலுவின் கெட்டப்பை பார்க்கும்போது அவர் இத்திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் “மாமன்னன்” திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக படக்குழுவினர் வடிவேலு கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் வடிவேலுவின் முகத்தில் நெற்றியில் இருந்து மூக்கு வரை தழும்பு காணப்படுகிறது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் “நம்ம வடிவேலுவா இது?” என்று ஆச்சரியமாக பார்க்கின்றனர். இந்த போஸ்டரின் மூலம் வடிவேலுவின் கதாப்பாத்திரம் இதுவரை அவர் ஏற்று நடிக்காத ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





