வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். அதை நிஜமாக்கும் அளவுக்கு சிலர் காமெடியாக பேசினால் மணிக்கணக்கில் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அந்த வரிசையில் நகைச்சுவை பேச்சாளர் மற்றும் நடிகர் மதுரை முத்து சில நிமிடங்கள் பேசினாலே பலமுறை சிரிக்க வைத்து விடுவார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி சொல்பவராக மேடையேறி அசத்தியவர்தான் மதுரை முத்து. அவர் காமெடியாக பேசினாலும் கடைசியில் மறக்க முடியாத ஒரு சிந்தனை கருத்தை சொல்லி பார்வையாளர்களை சிந்திக்கவும் செய்து விடுவது அவரது வழக்கம்.
தமிழ்நாடு மக்கள் மத்தியில் அவரது காமெடி பேச்சு பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது பள்ளி கல்லூரி பொது அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று பேசி வருகிறார். அவ்வப்போது சினிமாவிலும் மதுரை முத்து நடித்து வருகிறார். பட்டிமன்ற நடுவராகவும் கோவில் விழாக்களில் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மதுரை முத்து தனது சொந்த ஊரில் மறைந்த தனது பெற்றோர் மற்றும் விபத்தில் மறைந்த தனது மனைவிக்காக கோவில்கள் அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, மறைந்த எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவிக்காக சொந்த ஊரில் கோவில்கள் கட்டியிருக்கிறேன். 3 மாதங்களில் கட்டுமான பணி முடிந்த நிலையில், இன்னும் 15 நாட்களில் திறப்பு விழா செய்து விடுவேன்.
கோவில்கள் மட்டுமின்றி இதே இடத்தில் ஏழெட்டு அறைகள் கட்டி, பெற்றோர் இல்லாத ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் இங்கேயே நிரந்தரமாக தங்கி இலவசமாக படிக்க ஏற்பாடு செய்ய உள்ளேன். அதே போல் ஆதரவு இல்லாத வயதான முதியவர்கள் சிலரையும் இங்கே நிரந்தரமாக தங்க வைத்து அவர்களையும் பராமரிக்க முடிவு செய்திருக்கிறேன். என் சக்திக்கு உட்பட்டு இதை செய்வேன்.
மேலும் என்னுடைய வீட்டில் 8000 புத்தகங்கள் உள்ளன. அதில் 5000 புத்தகங்களை இங்கே கொண்டு வந்து ஒரு நூலகம் அமைத்து அங்கே வைக்க உள்ளேன். அந்த புத்தகங்களை இங்குள்ள நூலகத்துக்கு வரும் பள்ளி மாணவ மாணவியர் படித்து பயன்பெற திட்டமிட்டுள்ளேன் என்று அந்த வீடியோவில் மதுரை முத்து கூறியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள் குவிந்து வருகிறது.





