“விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனிடையே அஜித்குமார் பைக் சுற்றுலா கிளம்பிவிட்டார். மேலும் ஒரு மோட்டார் பைக் சுற்றுலா நிறுவனத்தையும் தொடங்கிவிட்டார். ஆனாலும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இது மட்டுமல்லாது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல் அஜித்தின் போட்டி நடிகரான விஜய், “லியோ” படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது தனது 68 ஆவது திரைப்படத்தின் பணிகளில் மூழ்கிவிட்டார். ஆனால் அஜித்தின் 62 ஆவது திரைப்படமே இப்படி முக்குகிறது என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு சோகத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் மகிழ் திருமேனி, லைகா நிறுவனத்தின் தமிழ்நாட்டு தலைமையான தமிழ் குமரனிடம் “விடாமுயற்சி” படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை அனுப்பி வைத்தாராம். ஆனால் தமிழ் குமரன், “இந்தியன் 2” திரைப்படத்தின் பணிகளுக்காக அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்த பிறகுதான் அந்த பட்டியலை பார்க்க முடியும்.

இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆனால் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி லைகா நிறுவனத்தின் தலைமையகம் இருக்கும் லண்டனுக்கே பறந்துவிட்டாராம். நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடம் காட்டுவதற்காகவே லண்டன் சென்றுள்ளாராம் மகிழ் திருமேனி.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்து மாதம் 18 ஆம் தேதி “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.





