நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இவர் தான் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித்திற்கு மனைவியாக நடிக்கிறார்.
காணாமல் போன மனைவியை கண்டுபிடிக்கும் கதை தான் விடா முயற்சியின் ஒன் லைன் ஸ்டோரி. இந்த திரைப்படத்தின் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன. தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அனேகமாக டிசம்பர் மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, குட் பேட் அக்லி திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இவர், கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் நடித்து தனது வில்லத்தனமான முகத்தை வெளிப்படுத்தி இருப்பார். அவர் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
இதே போல் சினேகாவின் கணவர் பிரசன்னாவும் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித்தின் அடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. முக்கியமாக, கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் அஜித் குமார் இணைய போவதாக ஒரு தகவல் பரவியது.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், அஜித் குமாரை சந்தித்து ஒரு கதையை கூறியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. குரங்கு பொம்மை மகாராஜா என இரண்டு தரமான திரைப்படங்களைக் கொடுத்தவர் நித்திலன் சாமிநாதன். அதுவும் அவரது மகாராஜா திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்ததால், இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நித்திலன் சுவாமிநாதன் அஜித்திற்கு படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.





