நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் அடிமட்டத்தில் இருந்து உயரத்துக்கு வந்தவர். துவக்கத்தில் துணை நடிகர்களில் ஒருவரான தினசரி சம்பளமாக ரூ.300, ரூ. 400 என சினிமாவில் நடித்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதன்முறையாக நாயகனாக அவர் நடித்தார்.
இந்த படத்தில், சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பிலிம்பேர் சிறந்த துணை நடிகை உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். அந்தளவுக்கு இந்த படம் சிறந்த படமாக இருந்தது.
அதன்பிறகு விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார், முன்னணி நடிகராக மாறினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோ, வில்லன் என்று இரண்டு நிலைகளிலும் அவர் மாறி மாறி நடித்து, தனது திரைபயணத்தில் அவரே குழப்பத்தை ஏற்படுத்தினார். ரஜினி நடித்த பேட்ட, கமல் நடித்த விக்ரம், விஜய் நடித்த மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இந்தியில் ஜவான் படத்திலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். இந்த 4 படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்கள்தான்.
எனினும் இப்படி பல படங்களில் ஒத்துக்கொண்டு ஹீரோ, வில்லன், கேமிரோ ரோல், கெஸ்ட் ரோல் என விஜய் சேதுபதி நடித்ததால், ஒரு கட்டத்தில் அவரது படங்கள் மிகப்பெரிய பிளாப் படங்களாக மாறியது. குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்த டிஎஸ்பி படம், ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டர்களில் காற்று வாங்கியது. சுறா, ஜப்பான், இந்தியன் 2 படங்களில் வரிசையில் டிஎஸ்பி படத்தையும் சேர்க்கலாம்.
ஆனால் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது. அமெரிக்காவில் நடந்த திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த படத்தின் 50வது நாள் விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. மேலும், அடுத்த படம் செய்யலாம் என்று இதுவரை 50க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் விஜய் சேதுபதியிடம் பேச்சு நடத்தி உள்ளனர். இப்படி தமிழ் சினிமாவில் குவியும் வாய்ப்புகளால், பாராட்டுகளால் தலைசுத்திப் போய் இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.





