இந்திய சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ராஜமௌலி. காட்சிக்கு காட்சி வித்தியாசம், அதில் புருவம் உயர்த்தும் அளவுக்கு பிரம்மாண்டம், நரம்புகளை புடைக்க செய்யும் சண்டை காட்சிகள் என ராஜமவுலிக்கு உண்டான ஸ்டைலில் எடுக்கப்படும் படங்களை ரசிக்க இங்கு ஏராளமானவர்கள் உள்ளனர்.
ராஜமவுலி கடைசியாக ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 2022 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் பேசப்பட, அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.
இதற்கு முன்னதாக ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஒட்டுமொத்த உலக சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தன. கிட்டத்தட்ட இந்திய சினிமாவில் அதிக அளவில் பேசப்பட்ட திரைப்படம் பாகுபலி என்றே கூறலாம். அது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அந்த திரைப்படம் வசூல் செய்து சாதனை புரிந்தது.
இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை ராஜமவுலி ரகசியமாக வைத்திருந்தார். இருப்பினும் அந்த திரைப்படத்தின் மகேஷ் பாபு நடிப்பதாக பேசப்பட்டது. இப்படியான சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அவர் வாய் திறந்து இருக்கிறார். அதில், தனது தந்தையுடன் சேர்ந்து அடுத்த திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் பேசி இருந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் மகேஷ்பாபு நடிக்க இருப்பது உறுதியாக இருப்பதாகவும், மற்ற நடிகர்கள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆப்பிரிக்க காடுகளில் இந்த திரைப்படத்தின் கதை நடப்பது போல் கதை எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





