மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்; இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளை தனது வாழ்க்கை வரிகளாக மாற்றியவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர்.
கடந்த 1917ம் ஆண்டில் ஜனவரி 17ம் தேதி பிறந்தவர் எம்ஜி ராமச்சந்திரன். பின்னாளில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகரான பிறகு எம்ஜிஆர் என தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர். புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் மக்கள் திலகம் வாத்தியார் சின்னவர் என பல அடையாளச் சொற்கள் எம்ஜிஆருக்கே சொந்தம். எம்ஜிஆர் என்பது எப்போதுமே ஒரு மந்திரச் சொல்லாக இருந்திருக்கிறது.
கடந்த 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் முதலமைச்சராக தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்தவர் எம்ஜிஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எம்ஜிஆர், தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். படுத்துக்கொண்டே ஜெயித்தவர் என்ற பெருமை எம்ஜிஆருக்கு உண்டு.
சினிமாவில் சிறந்த மனிதராக நடித்த எம்ஜிஆர் நிஜ வாழ்விலும் அரசியலிலும் சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டினார். தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்லாட்சி நடத்தினார். மக்கள் நலம் பெறும் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சி போல எம்ஜிஆர் ஆட்சியும் இன்றளவும் மக்களால் பொற்கால ஆட்சியாக போற்றப்படுகிறது.
கடந்த 1984ம் ஆண்டில் டிசம்பர் 24ம் தேதி முதுமை மற்றும் உடல் நல பாதிப்பு காரணமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். மூன்றுமுறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைத்த எம்ஜிஆரின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இன்று வரை இருந்து வருகிறது.
இந்நிலையில் அவரது 108வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அரசியல் செய்ய வரும் கட்சிகள் எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் கட்சி நடத்த முடியாது. அவரது ஆட்சி போல தருகிறோம் என்றுதான் மக்களிடம் பொய் வாக்குறுதி தருகின்றனர். ஆனால் என்றென்றும் போற்றி புகழும் எம்ஜிஆர் வழி நடக்கும் அரசியல்வாதிகள் இல்லாமல் போனதுதான் தமிழக மக்களின் துரதிஷ்டமாக உள்ளது. வருங்காலத்தில் அது மாறினால் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி மக்களுக்கு கிடைக்கும்.





