இயக்குனர் ஏஆர் முருகதாஸ் என்றாலே, தமிழ் சினிமாவில் தனி மரியாதை உண்டு. ஏனெனில் நல்ல படைப்புகளை தரக்கூடிய ஒரு சிறந்த இயக்குனராக தன்னை அடையாளப்படுத்தியவர். குறிப்பாக ரமணா, துப்பாக்கி, கத்தி, ஏழாம் அறிவு, சர்கார், கஜினி போன்ற படங்களால் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்றவர். விமர்சன ரீதியாகவும் நல்ல கதை ஆசிரியராக பாராட்டைப் பெற்றவர்.
அவர் இயக்கிய படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை தந்த படம் ரஜினிகாந்த் நடித்த தர்பார் தான். அதை பேட்ட ஸ்டைலில் கொண்டு வர நினைத்து, கடைசியில் ரஜினியின் ஓவர் ஆக்ஷனும் அவரது மகளாக நடித்தவரின் தேவையற்ற ஓவர் ஆக்டிங்கும் படத்தை மொக்கையாக்கி விட்டது. சில நேரங்களில் நல்ல இயக்குனர்களுக்கும் இப்படி அடி சறுக்குவது உண்டு.
தர்பார் தந்த பாதிப்பால் சில ஆண்டுகளாக படமே இயக்க வாய்ப்பின்றி இருந்த ஏஆர் முருகதாஸ் இப்போது, சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்து சல்மான்கான் நடிக்கும் இந்தி படம் ஒன்றை டைரக்ட் செய்ய கமிட் ஆகியிருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயன் படத்தை 3 மாதங்களுக்குள் அவர் முடித்தாக வேண்டும்.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் மோகன்லாலை, ஏஆர் முருகதாஸ் கமிட் செய்தார். முதலில் ஒத்துக்கொண்ட மோகன்லால், பிறகு தேதி இல்லை என்று மறுத்துவிட்டார். ஏற்கனவே கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜயுடன் ஜில்லா படங்களில் நடித்தவர் மோகன்லால். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார்.
ஆனால் ஏஆர் முருகதாஸ் படத்தில் அவர் நடிக்க மறுத்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. கதை பிடிக்கவில்லையா, படத்தில் அவரது கேரக்டர் பிடிக்கலையா எனத் தெரியவில்லை. மேலும், மோகன்லால் நடித்த படங்கள் தமிழில் சரியாக போவதில்லை என்பதாலும் அவர் நடிக்க விரும்பவில்லை என்ற காரணமும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரக்டரில் நடிக்க ஜெயராம் அல்லது சுரேஷ் கோபியை நடிக்க வைக்க ஏஆர் முருகதாஸ் முயற்சித்து வருகிறார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கனவே தீனா படத்தில் சுரேஷ் கோபியும், துப்பாக்கி படத்தில் ஜெயராமும் நடித்திருக்கின்றனர். ஆனால் இப்போது திருச்சூரில் சுரேஷ்கோபி பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடுவதால் அவரது கால்ஷீட் கிடைப்பதும் சிக்கலாக உள்ளது. இதையடுத்து, நடிகர் ஜெயராம், சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.





