ஒரு இயக்குநர் என்பவர், தனது படைப்பை உருவாக்கம் செய்து ரசிகர்களின் பார்வைக்கு தருகிறார். அந்த படைப்பை முதலில் அவர் விரும்புகிறார். அதையே, ரசனை மிகுந்த சினிமா ரசிகர்களுக்கும் முன்வைக்கிறார். அந்த படங்களும் அமோக வெற்றி பெறுகிறது. அந்த இயக்குநர்களை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் ஷங்கர் படங்கள், ராஜமவுலி படங்கள், வெற்றிமாறன் படங்கள் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. நிச்சயம் அவர்களது படங்கள் எல்லாவிதமான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் நிச்சயமாக பூர்த்தி செய்கிறது. ஏனெனில், கதைக்கு என்ன தேவை இருக்கிறதோ, அதை திரையில் கண்டிப்பாக அவர்கள் கொண்டு வருவார்கள்.
அந்நியன், இந்தியன், பாகுபலி, ஆர்ஆர்ஆர், ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை என அவர்கள் இயக்கிய படங்களை பார்க்கும்போது அதில் நிச்சயம் இயக்குநர் தனியாக தெரிகிறார். ஏனெனில் அங்கு ஹீரோயிசம், கமர்ஷியல் என்ற விஷயங்களுக்காக இயக்குநர் தனது படைப்பை தொலைக்கவில்லை.
ஆனால் கல்கி என்ற ஒரு மிகச்சிறந்த ஆளுமை மிக்க எழுத்தாளர் எழுதிய பொன்னியின் செல்வன் என்ற ஒரு மாபெரும் இலக்கிய படைப்பை கையில் எடுத்துக்கொண்டு அதன் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல், நாடகத்தனமாக எடுத்து, அந்த படைப்புக்கான மகத்துவத்தையே தொலைத்தவர் இயக்குநர் மணிரத்னம் என்றால் அது மிகையல்ல.
இதைக்கண்டு பொறுக்க முடியாமல்தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா நான், பாரதிராஜா, பாஸ்கர் மூன்றுபேரும் பொன்னியின் செல்வன் கதையை போட்டி போட்டிக்கொண்டு படிப்போம். நான் எத்தனை முறை இதுவரை படித்திருக்கிறேன் என்றே கணக்கு இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த போது ஒரு பீலிங்கும் இல்லை என நேரடியாகவே தனது விமர்சனத்தை வைத்தார்.





