90களில் தொடங்கி இப்போது வரை தமிழ் சினிமா பேச இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணி ரத்னம். காலத்திற்கு ஏற்றது போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்டு இருப்பதால், இப்போது வரை மார்க்கெட் இழக்காமல் அவர் கோலிவுட்டில் பயணித்து வருகிறார். இன்றைய தலைமுறையினருக்கும் பிடிக்கும் வகையில் அவர் படங்களை இயக்குவது தான் இதற்கு காரணம்.
இதில் உதாரணமாக, ஓகே கண்மணி திரைப்படத்தை கூறலாம். காதலர்கள் இருவரும் லிவிங்கில் வருவதை மிகவும் சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தி, பின்னர் காதலின் உணர்வையும் புரிய வைத்திருப்பார். இப்படி மணிரத்னத்தின் மேஜிக்கை நாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
மணிரத்னம் தனது முந்தைய திரைப்படங்களை மல்டி ஸ்டார்களை வைத்தே எடுத்து இருந்தார். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில், அரவிந்த்சாமி, அருண் விஜய், சிலம்பரசன், விஜய் சேதுபதி என ஒரு மிகப்பெரிய கூட்டணியை நடிக்க வைத்தார். இதன்பிறகு அவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது.
இதில், விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி திரிஷா ஐஸ்வர்யாராய் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தன. இப்படி மல்டி ஸ்டார்களை வைத்து இயக்குவதில், மணிரத்னம் கைதேர்ந்தவர் என்பதால் இந்த திரைப்படங்களுக்கு வரவேற்பும் கிடைத்து வந்தது. அடுத்ததாக தற்போது தக் லைப் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் மணிரத்னம்.
இதிலும் கமல்ஹாசன் சிலம்பரசன் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். திரிஷா, அபிராமி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். கமலின் வளர்ப்பு மகனாக சிலம்பரசன் இதில் நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, புதிய வீடியோ கிளிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, அவர் படம் இயக்கப் போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மணிரத்னம் அந்த ஐடியாவில் இல்லையாம். அவர் செக்கச் சிவந்த வானம் பொன்னியின் செல்வன் போன்று மீண்டும் மல்டி ஸ்டார்களை வைத்து படம் இயக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





