கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று அவரது தலைமையில் தமிழக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்து 15 நாட்களை கடந்துள்ள நிலையில் நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக அரசியல் களத்தில் தேர்தலில் திமுக ஆதரவில் வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அவர்களுக்கு அமைச்சர் பதவிகளும் தந்து, ஆதரவை பலப்படுத்தி உள்ளது. அத்துடன் கடந்த 15 நாட்களில் நிறைய குற்றச் சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளது.
குறிப்பாக கோவையில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் தவெக கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்ட புகார்களும் வந்துள்ளன.
இதற்கிடையே விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த தவெக தலைவர் விஜய், இப்போது அதிலும் ஏமாற்றத்தை தந்துவிட்டார். இதை 50 ஆயிரம் கடன் 5 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகள் என வரம்புக்குள் கொண்டு வந்து முழுமையான கடன்களை ரத்து செய்யவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி குறித்து அன்றே ரஜினிகாந்த் கணித்து சொல்லியிருப்பதாக கூறி நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதில் ரஜினி பேசிய வார்த்தைகள் இன்றைய காலகட்டத்துக்கு பொருந்தும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, சிஸ்டம் சரிசெய்யாமல் அரசியல் மாற்றம் செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் அந்த பாத்திரம் கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைத்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி தான் இருக்கும் அந்த ஆட்சி என்று பேசியிருக்கிறார். இது இன்றைய தவெக ஆட்சிக்கு பொருந்தும் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.





