கடந்த 2022ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான படம் காந்தாரா. மலைவாழ் பூர்வகுடி மக்களின் கடவுள் வழிபாட்டையும் நிலச்சுவான்தாரர் அதிகார அடக்குமுறையையும் மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி டைரக்ட் செய்து அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தை ஹொம்பாலே நிறுவனம் தயாரித்திருந்தது.
கன்னட மொழியில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்த நிலையில் தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்து படம் ரிலீஸானது. அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி வரவேற்று கொண்டாடிய ஒரு சிறந்த படமாக காந்தாரா அமைந்தது. ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.
இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டியை தனது போயஸ் கார்டன் வீட்டுக்கே நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இதையடுத்து காந்தாரா சாப்டர் 1 என்ற படத்தை தொடர்ச்சியாக ரிஷப் ஷெட்டி டைரக்ட் செய்து அவரே நாயகனாக நடித்துள்ளார்.
ஆனால் இப்போது உருவாகி இருக்கும் படம் காந்தாரா படத்தின் முந்தைய காலகட்டத்தில் அதாவது 800ம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை கொண்ட முன்கதையாக உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ருக்மணி வசந்த் சப்தமி கவுடா ஜெயராம் குல்சன் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழ் வெர்சன் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
காந்தாரா சாப்டர் 1 டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் மிரண்டு போயிருக்கின்றனர். படத்தின் பிரமாண்டம் அதில் வரும் சில காட்சிகளிலேயே தெரிகிறது. ஆனால் பாகுபலி படத்தில் பார்த்த காட்சிகளை போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் சிலர் விமர்சனம் செய்கின்றனர். தெய்வ நம்பிக்கை, கொத்தடிமை மக்கள் என்ற கதைக்களத்தில் இந்த படம் உருவாகி இருப்பதை டிரெய்லரில் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
இதற்கிடையே காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் வெளியான நிலையில் முக்கியமான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் தமிழ் வெர்சனில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது குட்நைட் நடிகர் மணிகண்டன்தான். அவர் ஒரு டப்பிங் கலைஞர் என்ற முறையில் இந்த படத்தில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டிக்கு மணிகண்டன் குரல் கொடுத்திருக்கிறார்.





