தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது பெரிய நடிகராக உயர்ந்திருப்பவர் மணிகண்டன். பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தாலும், அவருக்கு ஜெய் பீம் திரைப்படம் மிக நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அந்த திரைப்படத்தில் ராஜாகண்ணு என்னும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இல்லை அவர் வாழ்ந்திருந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒரு இருளர் சமுதாய இளைஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பார் மணிகண்டன். இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது நடிப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்துக் கொள்ள சில காலங்கள் எடுத்துக் கொண்டார். இதில் மணிகண்டனின் முதல் திரைப்படமாக அமைந்தது குட் நைட். மிகக்குறைந்த பட்ஜெட்டில் தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதை களத்தில் இது எடுக்கப்பட்டது. குறட்டை என்பதுதான் இந்த திரைப்படத்தின் ஆணிவேர்.
இளைஞர் விடும் குறட்டையால் என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது, அவரது காதலுக்கு இது எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதை தான் இந்த திரைப்படத்தில் இயக்குனர் கூறி இருப்பார். அதில் நகைச்சுவையையும் கலந்து எடுத்திருந்ததால் குட் நைட் திரைப்படம் பாராட்டைப் பெற்றது. அடுத்ததாக லவ்வர் திரைப்படத்தின் நடித்தார் மணிகண்டன்.
இது முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்களை மையப்படுத்தியே எடுக்கப்பட்டது. அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆனது என்றே கூறலாம். மிக யதார்த்தமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தற்போது மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது பிரஸ் ஷோ திரையிடப்பட்டிருக்கிறது.
அதில் படத்தைப் பார்த்த அனைவருமே குடும்பஸ்தனை புகழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாதி நகைச்சுவையாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் எமோஷன் கலந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். படத்தின் வசனம் திரைக்கதை கிளைமாக்ஸ் என அனைத்தும் அற்புதமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் கண்டிப்பாக மணிகண்டன் ஹேட்ரிக் வெற்றியை பதிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறி வருவதால் குடும்பஸ்தன் திரைப்படம் இந்த ஆண்டின் வெற்றி திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது என்பதை உறுதியாக கூறலாம்.





