பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களை முடித்துவிட்டு, மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசன் உடன் கைகோர்த்து தக் லைப் திரைப்படத்தை கொடுத்தார். சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படத்தில் திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்று இருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. முதல் பாதி நன்றாகவே இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி திசை மாறி எங்கெங்கோ பயணித்தது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் தக் லைப் திரைப்படம் இணையத்தில் வரம்புக்கு மீறி கிண்டல் அடிக்கப்பட்டது.
பலரும் என்ன சொல்கிறோம் என்று தெரியாமலேயே கலாய்க்க ஆரம்பித்தனர். அதேசமயம் ஒரு தரப்பினர் இந்த திரைப்படத்தை இந்த அளவு மட்டம் தட்டி பேச வேண்டிய தேவை இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர். இது இப்படி இருக்க மணிரத்னம் தனது அடுத்த திரைப்படத்தை இயக்குவது தொடர்பான பணிகளில் இறங்கிவிட்டார்.
இதில் அவர் அடுத்ததாக, விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் கைகோர்க்க இருக்கிறார். ஏற்கனவே துருவ் தற்போது பைசன் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதியை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.
வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்காக தீவிர கபடி பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார் துருவ் விக்ரம். அது மட்டுமல்ல அவர் வேறு எந்த திரைப்படங்களிலும் கமிட் ஆகாமலும் இருந்தார். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் அவருக்கு வந்ததாகவும், ஆனால் அந்த சமயத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
இப்படியான சூழலில்தான் அவர் மணிரத்னத்துடன் கைகோர்த்து இருக்கிறார். ஆக்சன் கதைக்களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். வழக்கம்போல் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராசி திரைப்படத்தில் ஹீரோயின் ஆக வரும் ருக்மணி வசந்த், இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





