சமீபத்தில் வெளியான லியோ படத்தில், மன்சூர் அலிகான் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் தீவிர ரசிகர் என்பதால், இந்த வாய்ப்பை கொடுத்திருந்தார். லியோ படத்தில் சில காட்சிகளில்தான் மன்சூர் அலிகான் வருவார். அவர் சொல்வது போல, லியோ தாஸ் பிளாஷ் பேக் கதையே வரும்.
இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டுக்கு பிறகு ஒருமுறை வீடியோ ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், திரிஷாவுடன் லியோ படத்தில் சேர்ந்து நடிக்க முடியவில்லை என்பதை, கிண்டலாக கூறியிருந்தார். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டது போல, திரிஷாவுடன் சீன் இருக்கும் என நினைத்தேன். ஆனால், டைரக்டர் திரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என்றார்.
இந்த வீடியோவை பார்த்த திரிஷா, மன்சூர் அலிகானை கண்டித்து பதிவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகைகள் கஸ்தூரி, குஷ்பு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போன்றவர்களும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, இந்த பிரச்னை வைரலானது.
இதில் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராகவும் உள்ள குஷ்பு, இதுகுறித்து ஆணையத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன் என்றார். அதுபோலவே, மகளிர் ஆணையம் கொடுத்த அழுத்தத்தால் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் மன்சூர் அலிகான் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
இந்த பிரச்னையில், மன்சூர் அலிகான், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்றும், இல்லறமாம் நல்லறத்தில், நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது, நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்கு தந்தருள்வானாக என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இந்த பிரச்னைக்கு முடிவுக்கு வந்ததாக கருதிய நிலையில் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகிய 3 பேர் மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் திரிஷாவிடம் மன்னித்து விடு என்று கூறவில்லை. மரணித்துவிடு என்றுதான் கூறினேன். என்னுடைய பிஆர்ஓ தவறுதலாக புரிந்துக்கொண்டு மன்னித்துவிடு என்று எழுதிவிட்டார். போனில் நான் இதை சொன்னதால், இந்த தவறு நடந்துவிட்டது. அந்த நேரத்தில், பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டேன், என்று கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.





