நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். துவக்கத்தில் துணை நடிகராக தன் நடிப்பு பயணத்தை துவங்கிய அவர், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 14ம் தேதி அவரது நடிப்பில் 50வது படமாக மகாராஜா ரிலீஸ் ஆகிறது.
விஜய் சேதுபதிக்கு துவக்கத்தில் துணை நடிகராக சில படங்களில் நடித்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று படத்தில்தான் நாயகனாக நடித்தார். அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், ரம்மி போன்ற படங்கள் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. குறிப்பாக பண்ணையாரும் பத்மினியும் படத்தில் கவனத்தை ஈர்த்தார்.
கதையின் நாயகனாக மட்டுமின்றி, வில்லனாகவும் தன்னால் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்ற நிலையில் பேட்ட படத்தில் ரஜினிக்கும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கும், விக்ரம் படத்தில் கமலுக்கும் வில்லனாக நடித்து அசத்தியவர் விஜய் சேதுபதி. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற இந்தி படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியை பொருத்தவரை நடிகராக இருக்கிறோம். ஹீரோ, வில்லன், கேமியோ ரோல் என எதுவாக இருந்தாலும் அது நடிப்பு என்ற பாதையில்தானே பயணிக்கிறோம் என்ற நிலையில், ஹீரோ என்ற வட்டத்துக்குள் நிற்காமல் சகல வித நடிப்பிலும் தன்னை வெளிப்படுத்தினார். ஆனால் ரசிகர்களின் பார்வையில் அது வேறுவிதமான பார்வையை கொண்டு வந்தது, அவருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அதனால் இவர் வில்லனாக, கதாநாயகனாக மாறி மாறி நடித்தால் இவரது வில்லனாக ஏற்பதா, கதாநாயகனாக ஏற்பதா என்பதை குழப்பம் ஏற்பட்டது. மேலும், கேமியோ ரோலில் இவர் நடித்த படங்களை, இவரது படம் என்று எதிர்பார்த்து போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும், விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிந்த போதும், அவருக்கான நிலையான இடம் இல்லாமல் போனது. அதனால் இனி ஹீரோ கேரக்டர் மட்டும்தான் நடிப்பேன் என விஜய் சேதுபதியே தெளிவாக அறிவித்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நான் இதுவரை 50 படங்களில் நடித்து முடித்து விட்டேன். ஆனால் நான் நடித்த பல படங்களுக்கு எனக்கு இன்னும் முழுமையான சம்பளம் கிடைக்கவில்லை. இது யாருக்குமே தெரியாது. செக் பவுன்ஸ் ஆகும். சம்பளம் பாக்கி வைக்கப்படும். என்றாலும் தயாரிப்பாளர் படம் எடுக்க முன்வருவதை நான் ஆதரிக்கிறேன். அதற்காகவே படங்களில் நடிக்கிறேன், என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





