மலையாளத்தில் இளம் நடிகர்களின் தனது இயல்பான நடிப்பால் தனிமுத்திரை பதித்து வருபவர் நடிகர் பகத் பாசில். இவர் இயக்குனர் பாசில் மகன். காதலுக்கு மரியாதை பூவிழி வாசலிலே என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களை இயக்கியவர் டைரக்டர் பாசில் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை நஸ்ரியா பகத் பாசிலின் மனைவி என்பதும் கூடுதல் தகவலாக உள்ளது.
மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் பகத் பாசில் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து பகத் பாசில் அறிமுகமானார். தொடர்ந்து மாமன்னன் படத்தில் ரத்னவேலு என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். கமலுடன் விக்ரம், ரஜினியுடன் வேட்டையன் படங்களிலும் பகத் பாசில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் ஒரு படத்தில் பகத் பாசில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு மாரீசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதில் வடிவேலு, பகத் பாசில் சம்பளம் தலா ரூ. 5 கோடி என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் விற்பனை இன்னும் நடக்காமல் இழுத்துக்கொண்டே போகிறது. அதற்கு காரணம் நடிகர் வடிவேலுதான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மாரீசன் படத்தின் பிஸினஸ் கட் எனப்படும் 40 நிமிட வீடியோவை ஓடிடி நிறுவனம் பார்த்துள்ளது. அதன்பிறகுதான் இந்த படத்தை வாங்க மறுத்திருக்கிறது.
ஏற்கனவே நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை அந்த ஓடிடி நிறுவனம் ரூ. 10 கோடி என அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. ஏனெனில் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் இமேஜ் பெரிய அளவில் இருக்கும் என்று நம்பி அதிக தொகைக்கு வாங்கியது. ஆனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தியேட்டரிலும் ரசிகர்கள் பார்க்க முன்வரவில்லை. ஓடிடியிலும் யாரும் பார்க்கவில்லை. இதனால் அந்த படம் பெரிய நஷ்டத்தை தந்துள்ளது.
ஆனால் மாரீசன் படத்தின் பிரதான வேடத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தாலும் வடிவேலு நடித்த காட்சிகளே அந்த பிஸினஸ் கட் வீடியோவில் அதிகமாக இருந்ததால், இது வடிவேலு படம் என்று அந்த ஓடிடி நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்க மறுத்துள்ளது. இதனால் நாய் சேகரால் பகத் பாசில் படத்துக்கு டிஜிட்டல் விற்பனை மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.





