நாளை மறுதினம் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாட வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குவியும். பலரும் சொந்த ஊர்களில் இந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
ஜனவரி மாதம் 10ம் தேதிக்கு பிறகு தைப்பொங்கல் பண்டிகை துவங்கி விடுவதால் எப்போதுமே பொங்கலுக்கு புதிய படங்கள் ரிலீஸாகும். அதே போல் புத்தாண்டு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் புதிய படங்கள் வெளியாகும். ஆனால் ஆங்கில புத்தாண்டுக்கு படங்கள் ரிலீஸ் என்பது அரிதாகவே இருக்கிறது.
அந்த வகையில் வருகிற ஜனவரி 1ம் தேதி புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லை என்றாலும், 10ம் தேதி விடாமுயற்சி வணங்கான் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் வெளியாக தயாராக உள்ளன. அதே போல் ஜனவரி 24ம் தேதி சித்தா, பண்ணையாரும் பத்மினியும் படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2024ம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது. 20 ஆண்டுகளுக்கு பின் தரணி இயக்கத்தில், விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் நடித்த இந்த படம் வெளியாகி 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதே போல் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படமும் 445 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது.
இந்த சூழலில் வருகிற ஆங்கில புத்தாண்டு தினத்தன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். வில்லன் பவானி கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி மிரட்டியிருந்தார்.
நாசர் அர்ஜூன்தாஸ் சஞ்சீவ் சாந்தனு ஸ்ரீநாத் ஆண்ட்ரியா தீனா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. வருகிற ஆங்கில புத்தாண்டில் மாஸ்டர் படம் வெளியாக இருப்பது தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





