தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் ஒரு சகாப்தமாக வாழ்ந்து மறைந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். சிறுவயதிலேயே நாடக நடிகராக இருந்த எம்ஜிஆர் பின்னாளில் சினிமா நடிகராக மாறினார். அவர் நாயகனாக நடித்த முதல் படம் சதிலீலாவதி. அவர் மொத்தம் 136 திரைப்படங்களில் படங்களில் நடித்த நிலையில் அதில் 115 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
எம்ஜிஆரை பொருத்த வரை தனது படங்களில் அவர் புகை பிடிப்பது போலவோ மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். ஆனால் மதுபோதையில் இருப்பது போல் நடிப்பார். அது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும் விதமாக மதுபானத்தை கோப்பையில் இருந்து கீழே கொட்டி விடுவார். அந்தளவுக்கு ரசிகர்களின் ஒழுக்கத்தில் அக்கறை காட்டியவர் எம்ஜிஆர்.
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சி மீது ஆர்வம் காட்டி எம்ஜிஆர் அதன்பிறகு திமுக மீது அதிக பற்று கொண்டார். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைளால் ஈர்க்கப்பட்டு திமுக ஆதரவாளராக மாறிய எம்ஜிஆர் தனது படங்களில் அண்ணா பெரியார் புகைப்படங்களை காட்டுவார். திமுக கட்சி கொடியை உதயசூரியன் புகைப்படங்களை காட்டியிருப்பார். திமுக கொள்கைகள் குறித்தும் சில படங்களில் பேசியிருப்பார்.
எம்ஜிஆர் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் ஆழமான கவனம் செலுத்தும் பண்பை கொண்டிருந்தார். அதனால் எல்லா விஷயங்களிலும் அவரால் மாறுப்பட்டு சிந்திக்க முடிந்தது. எதையும் நிதானமாக அணுகும் அவரது நிர்வாக திறமையால்தான் பல பிரச்னைகளை அவர் சுமூகமாக முடிப்பதில் வல்லவராக இருந்தார். அதனால் தன்னை பிரத்யேகமாக பேட்டி காண வரும் நிருபர்களிடம் கூட அந்த சமயோசித யுக்தியை கையாண்டிருக்கிறார்.
அதாவது தன்னை பேட்டி காண வரும் பத்திரிகையாளரிடம், ஆரம்பத்திலேயே இந்த கட்டுரையை பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு முன்பு முழுமையான வடிவில் என்னிடம் காட்டிவிட வேண்டும். என்னுடைய ஒப்புதலுக்கு பிறகு நீங்கள் அதை பப்ளிஷ் செய்துக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் சம்மதித்தால் பேசலாம். இல்லை என்றால் நான் நேர்காணல் தர விரும்பவில்லை என்று கட் அண்ட் ரைட்டாக கூறிவிடுவார்.
ஏனெனில் சிக்கலான அரசியல் சினிமா சார்ந்த கேள்விகளுக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் வேறுமாதிரியாக திரிக்கப்பட்டு தவறாக பிரசுரமாகி விட்டால் நாளை அது தவறாக போய்விடுமே என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த ஒரு யுக்தியை எம்ஜிஆர் கையாண்டுள்ளார். அதனால் எம்ஜிஆர் தந்த பர்சனல் நேர்காணல் அனைத்துமே அவரது பார்வைக்கு சென்ற பிறகே மக்களின் பார்வைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





