நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. திருச்சியை சேர்ந்த அவர் பொறியியல் பட்டதாரி ஆக இருந்தார். ஆனால் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் வளர்த்துக் கொண்ட அவர், குறும்படங்களை இயக்கி அதன் மூலம் கவனம் பெற்றார். தொடர்ந்து நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் நலன் குமாரசாமி திரைத் துறையில் கால் பதிக்க, தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கான கதையை எழுதினார்.
இப்படியான நேரத்தில், நலன் குமாரசாமி இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்தது சூது கவ்வும். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், கல்ட் கிளாசிக் படமாக உருவாகி வெற்றிக்கொடி நாட்டியது. வித்தியாசமான கதைகளத்தில் எடுக்கப்பட்ட சூது கவ்வும், ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் நலன் குமாரசாமி பேசப்பட்டார்.
இதன் பிறகு, அவர் சூர்யாவுடன் இணையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு விவகாரங்களால் அந்த படம் தடைப்பட்டது. இதைடுத்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு, காதலும் கடந்து போகும் திரைப்படத்தை எடுத்தார் நலன் குமாரசாமி. கொரியன் திரைப்படத்தை ரீமேக் செய்து இந்தப் படத்தை அவர் உருவாக்கி இருந்தார்.
விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டின் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், அப்போதைய நேரத்தில் வசூலை குவிக்கவில்லை என்றால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஏன் இப்போது வரை காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம். படத்தில் விஜய் சேதுபதி மடோனா இருவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இந்த திரைப்படம் இடம்பெற்றது.
இதன் பிறகு மாயவன் சூப்பர் டீலக்ஸ் திரைப்படங்களுக்கு கதை எழுதிய அவர், இப்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடிக்கிறாராம். ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த ஆண்டில் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நலன் குமாரசாமி முத்திரை பதித்த சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
முதல் பாகத்தில் நடித்த ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி உள்ளிட்ட பலரும் இதில் வருகின்றனர். எஸ் ஜே அர்ஜுன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். மிர்ச்சி சிவா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே முயற்சி சிவா தில்லுமுல்லு படத்தில் இரண்டாம் பாகத்தில் நடித்ததாகவும், ஒரு பர்னிச்சரை உடைத்தது பத்தாதா என்றும் கிண்டலடித்து வருகின்றனர். அதேசமயம் இந்த திரைப்படம் முதல் பாகம் கொடுத்த தாக்கத்தை அப்படியே ரசிகர்களுக்கு கடத்துமா என கேள்வியும் எழுந்துள்ளது.





