கடந்த 2023ம் ஆண்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த படம் ஜெயிலர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ரம்யாகிருஷ்ணன் வசந்த் ரவி யோகிபாபு சரவணன் மாரிமுத்து அறந்தாங்கி நிஷா மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
இந்த படத்தில் கேமியோ ரோலில் மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் சுனில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் காவலய்யா பாட்டுக்கு நடிகை தமன்னா போட்ட குத்தாட்டமும் படத்தை பெரிய அளவில் கொண்டு சென்றது. ரஜினிக்கு இன்னொரு பாட்ஷா என்று ஜெயிலர் படம் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இதில் 15 நாட்கள் ஷூட்டிங்கில் பங்கேற்க முதல்கட்டமாக கால்ஷீட் தந்திருக்கும் ரஜினிகாந்த் சென்னையில் 5 நாட்களும் அதன்பிறகு ஐதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் 10 நாட்களும் பங்கேற்க உள்ளார். போலீஸ் செட் அமைத்து ஷூட்டிங் நடந்து வருகிறது.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்துக்கு வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யூனிட் ஆட்கள் என அனைவரிடமும் உள்ள மொபைல் போன்கள் வாங்கப்பட்டு, பிறகு மதிய உணவு இடைவேளையின் போது தரப்படுகிறது. பிறகு மீண்டும் அவர்களது மொபைல் போன்கள் சேகரிக்கப்பட்டு படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது மீண்டும் தரப்படுகிறது. படப்பிடிப்பு முடியும் வரை இதை மிகவும் கண்டிப்பாகவும் கவனமாகவும் பின்பற்றுமாறு படத்தின் இயக்குனர் நெல்சன் உத்தரவாக கூறியிருக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம், கூலி படத்தின் படப்பிடிப்பு நடந்த காட்சிகள் மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயங்கரமாக அப்செட் ஆகி விட்டார். அதனால் முன்னணி நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் மொபைல் போன்களுக்கு கட்டாய தடை விதிக்கப்படுகிறது.
ஆனால் இலங்கையில் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படப்பிடிப்பை இயக்குனர் சுதா கொங்கரா நடத்தி வருகிறார். அங்கு வெளிப்புற இடங்களில் படப்பிடிப்பு நடப்பதால் அங்கு வரும் ரசிகர்கள் பலரும் ஷூட்டிங் காட்சிகளை படம் பிடித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதை தடுக்க முடியாத சூழலில், படத்தின் முக்கிய காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வருவதால் பயங்கர அப்செட்டில் இயக்குனர் சுதா கொங்கரா இருந்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





